பக்கம் எண் :

பக்கம் : 406
 

சென்றான் - மருசியும் பயாபதி மன்னனை வணங்கித் தன் ஊரைநோக்கிப் புறப்பட்டான்,
(எ - று.)

தூதாகவந்த மருசியை அன்று அங்கு தங்கச்செய்து, தன்னுடைய செல்லப்பெருக்கு
முதலியவைகளைக் காட்டியதுடன் நாடகம் ஒன்றையும் மருசியின் பொருட்டு ஆடச்செய்து,
அவனைக் களிப்பித்து, மறுநாள் பெரியவர்களை உடனனுப்பி வழிவிட்டு வருமாறு
செய்தான் என்க. வந்த தூதுவனை உடனே அனுப்பிவிடுவது தக்கதன்றாகலானும். தன்
செல்வப் பெருக்கைப் பார்த்துச் சென்றால்தான் தன்னைப்பற்றிச் சுவலனசடியரசனிடம்
புகழ்ந்து பேசுதற்கு வாய்ப்பாக இருக்குமாதலானும் அங்குத் தங்கச்செய்து செல்வச்
சிறப்பைக் காட்டினன். மன்னனாகிய தான் தூதுவனுக்கு வழியனுப்பச் செல்லுதல்
தகுதியன்மையின் பெரியோர்களை யனுப்பினான்.

மருசி தனது நகரத்தை அடைதல்

572.

உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச்
சலநல 1சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்
குலனல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு
நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே.

     (இ - ள்.) உலன் நலன் அடு திண்தோள் - திரண்ட கல்லின் நன்மையைக்
கெடுக்கின்ற வலிய தோள்களையுடையவனும், ஊழி - பன்னாள் வாழும் இயல்புடையவனும்,
வேல் ஓடை யானை - வேலினையும் நெற்றிப்பட்டத்தை யணிந்த யானைப் படையையும்
உடையவனும் ஆகிய, சலநலசடி என்பேர் - சுவலனசடி என்னும் பேரைப் பூண்ட, தாமரைச்
செங்கணான் தன் - செந்தாமரைமலரைப்போன்ற கண்களையுடைய வித்தியா தர
மன்னவனது, குலநலம்மிகு - குலநலத்தினால் மிகுந்த, செல்கை - செல்வாக்கையுடைய,
கோவோடு ஒப்பார்கள் வாழும் - அரசனோடு ஒத்தவர்கள் வாழ்கின்ற, நலன் அமர் -
நன்மை பொருந்தின, நளி - குளிர்ந்த, சும்மை - பேரொலியையுடைய, தொல்நகர்
நண்ணினான் - பழமையான இரதநூபுர நகரத்தை அடைந்தான்.

மருசி இரதநூபுர நகரத்தை யடைந்தான். தோள்கள் தம்முடைய திண்ணிய தன்மையால்
தூண்களில் ஆற்றலைக் கெடுத்தன. மருசியின் இரத நூபுர நகரம் குலநலத்தாலும்
செல்வநலத்தாலும் சிறந்தவர்கள் வாழ்கின்ற இடமாகும். அங்குள்ள மக்கள் அரசசெல்வம்
போன்ற பெருஞ்செல்வம் படைத்தவர்கள் என்பார் “செல்கைக் கோவொடொப்பார்கள்
வாழும்“ என்றார்.

( 142 )


(பாடம்) 1. சடியெனப்பேர்.

ஆறாவது தூதுவிடுசருக்கம் முடிந்தது.