இது திவிட்ட நம்பி ஓர் அரிமாவினைப் பிளந்து கொன்ற செய்தியைக் கூறும் பகுதியாம். இதன்கண், போதன நகரத்திற்குத் தூதுசென்ற மரீசி மீண்டும் சடியரசன்பால் எய்திப் போதனத்தே நிகழ்ந்த செய்திகளை உரைத்தலும், பயாபதிமன்னன் விசய திவிட்டர் முதலியோர் மாண்பினை உரைத்தலும், சடி தன் அமைச்சருடன் ஆராய்ந்து திவிட்ட நம்பி அரிமாவைக் கொல்வதனை அறிந்து வருமாறு ஒற்றரை விடுதலும், அச்சுவகண்டனது காமக் களிப்பும், அச்சுவகண்டனுக்குச் சதவிந்து அரசியலறம்கூறி நினக்கொரு பகையுளதென நிமித்தத்தால் அறிந்தேன் எனலும், அச்சுவகண்டன் அவனை வெகுண்டு இகழ்தலும், அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறியவாறு பயாபதியின்பால் திறை பெற்று வருமாறு தூது போக்கலும், பயாபதி தன்மக்கள் அறிவுறாதபடி அச்சுவகண்டனுக்குத் திறை கொடுத்தலும், அதனை அறிந்த திவிட்டன் வெகுண்டு விலக்குதலும், அத்தூதர்கள் மீண்டுவந்து அரிமஞ்சுவின்பாற் கூறுதலும், அரிமஞ்சு, இச்செய்தியை அச்சுவகண்டன் அறியாதபடி மறைத்துத் திவிட்டன் அரிமாவிற் கிரையாகும்படி ஒரு சூழ்ச்சி செய்ய எண்ணி அரிகேதுவினை மாயச்சீய மாக்கிச் சுரமைநாட்டிற் போக்குதலும், அச்சீயத்தைப்பற்றித் தூதுவர் திவிட்டனுக்கு அறிவித்தலும், திவிட்டன், அவ்வரிமாவிருக்குமிடம் சென்று அதனைத் துரத்தலும், அம்மாயச் சிங்கம் ஒரு சிங்கம் உறையும் குகையுள் ஓடிமறைய, அம்மெய்ச்சிங்கம் சினந்து திவிட்டன்மேற் பாய்தலும், திவிட்டன் அச்சிங்கத்தைப் பிறந்து கொல்லுதலும், மீண்டு வரும்போது விசயன் திவிட்டனுக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம் முதலியவற்றின் காட்சிகளை உரைத்தலும், நகரத்தார் எதிர்கொள்ளலும், பயாபதிமன்னன் மகிழ்தலும் பிறவும் கூறப்படும். |