பக்கம் எண் :

பக்கம் : 408
 

     (இ - ள்.) மற்ற மாநகர் - அந்தப் பெரியநகரமாகிய இரதநூபுரத்தின் கண், மருசி -
மரீசி என்னும் தூதன், புக்கபின் - புகுந்த பிறகு, கொற்றம் வேலவன் - வெற்றியாற்சிறந்த
வேற்படையையுடைய சடி வேந்தனுடைய, கோயில் - அரண்மனையினமைந்த, மாநெதி -
பெருஞ்செல்வம், முற்று வான்கடை மூன்றும் - நிறைந்துள்ள உயரிய வாயில்கள்
மூன்றனையும், சென்று - கடந்துபோய், கோன் - அச் சடி வேந்தனுடைய, சுற்று வார் கழல்
- சுற்றிக்கடப்பட்ட நீண்ட கழல்களையுடைய அடிகளை, தொழுது - வணங்கி, துன்னினான்
- எய்தினான், (எ - று.)

  போதன நகரத்தினின்றும் வந்த மரீசி என்னுந் தூதன், வெற்றி வேலையுடைய சுவலனசடி
மன்னன்பால் அச்செய்தியை அறிவிக்க, அம் மன்னன் அரண்மனையை எய்தி,
அம்மன்னனை வணங்கினான் என்க. மாநெதி - பெருஞ்செல்வம். நெதி - இறைப்பொருள்
என்பாருமுளர். இவ்வாசிரியர் நெதி என்னும் இச்சொல்லைப் பிறாண்டும் வழங்கியுள்ளார்.
ஆண்டெல்லாம் செல்வம் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றது. சடி மன்னன்
இத்தூதன் வாயிலாய் வெற்றிச் செய்தியையே கேட்கவிருத்தலைக் கருதிப்போலும் கொற்ற
வேலவன் எனக் குறிப்பாராயினர். கழலும் சடியின் வெற்றியையே விளக்கிநின்றது.

( 1 )

574. 1விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக்
கலந்து மாமணிக் கடக மின்செய
அலங்கல் வேலினா னங்கை யாலவற்
கிலங்கு மாநிலத் திருக்கை
2யேவினான்.

     (இ - ள்.) விலங்கு - துலங்குகின்ற, வார் குழை - நேரிய குண்டலங்கள், மிளிர்ந்து
- பிறழ்ந்து, வில் இட - ஒளிவீசா நிற்பவும், மாமணிக் கடகம் - சிறந்த மணிகள்
வைத்திழைக்கப்பட்ட கடகம் என்னும் கையணிகள், கலந்து - சேர்ந்து, மின் செய -
மின்னவும், அலங்கல் வேலினான் - மாலை சூட்டப்பட்ட வேற்படையையுடைய
சடிவேந்தன், அங்கையால் - தன் அழகிய கையால், அவற்கு - அந்த மரீசிக்கு, மாநிலத்து
- சிறந்த விடத்தே, இருக்கை - ஆதனத்தில் அமர்தலை, ஏவினான் - (குறிப்பாகக் காட்டி)
பணித்தான், (எ - று.)

     இருக்கையில் அமரும்படி கையால் சுட்டிக்காட்டி ஏவினான் என்க. இருக்கை -
இருத்தல், மகிழ்ச்சியால் தலையை யசைத்தானாகலின் குண்டலங்கள் பிறழ்ந்தொளி செய்தன
என்க. இரு கைகளையும் ஒருசேர நீட்டிப் பணித்தலின் கடகங்களின் ஒளி தம்முட் கலந்து
மின்னின என்க. அத்தாணியின் கீழ்நிலம் மணி பொன் முதலியவற்றால் அழகு
செய்யப்பட்ட தாகலின் ‘மாநிலம்‘ என்றார்.

( 2 )


(பாடம்) 1. இலங்கு. 2. யெய்தினான்.