பக்கம் எண் :

பக்கம் : 967
 
இதுவுமது
வேறு
1553. தேவர்க டிசைமுகங் காப்ப மாநிதி
யோவல விரண்டுநின் றொருங்கு வீழ்தர
மேவிய வருங்கலம் விளங்க நோக்கிய
காவலன் செல்வநீர்க் கடலுண் மூழ்கினான்.
 
     (இ - ள்.) தேவர்கள் திசைமுகம் காப்ப - தெய்வங்கள் எட்டுத் திசையிடத்தும் நின்று
காவல்புரியா நிற்ப, மாநிதி இரண்டும் நின்று - சங்கநிதி பதுமநிதி என்னும் சிறந்த நிதிகள்
இரண்டும் தன் கருவூலத்தே நிலைத்து நின்று, ஓவல ஒருங்கு வீழ் தர - ஒழிவில்லாமல்
ஒன்றுபட்டு விரும்பியவற்றை உதவா நிற்ப, மேவிய அருங்கலம் - சங்கு சக்கரம் முதலிய
பொருந்தா நின்ற அருங்கலங்கள் ஏழும் தற்சூழ்ந்து, விளங்க - திகழாநிற்ப, நோக்கிய -
இவையிற்றைக் கண்ட, காவலன் - திவிட்டநம்பி, செல்வ நீர்க் கடலுள் - செல்வமாகிய
நீரையுடைய பேரின்பக் கடலினில் , மூழ்கினான் - முழுகித் திளைத்தான், (எ - று.)

     வீழ் - பெயர் - விரும்புவன என்பது பொருளாகக் கொள்க.

     தேவர்கள் திசை காப்ப மாநிதி இரண்டும் ஒழியாதே வேண்டவன நிதி தர,
அருங்கலம் விளங்க இவையிற்றைக் கண்ட நம்பி செல்வமாகிய நீரையுடைய இன்பக்
கடலுள் மூழ்கினான் என்க.

(423)

 
அருகக் கடவுள் திருக்கோயில் விழாவயர்ந்து
நகரம் மகிழ்தல்
1554. திருவமர் தாமரைச் செம்பொ னாயிதழ்
மருவிய திருவடி வாமன் பொன்னகர்
விரவிய விழவொடு வேள்விக் கொத்தரோ
கருவிய வளநகர் கண்கு ளிர்ந்ததே.
 
     (இ - ள்.) திருவமர் - திருமகள் விரும்புதற்குரிய, செம்பொன் ஆய்இதழ் - செவ்விய
பொன்னிறமமைந்த நுணுகிய இதழ்களையுடைய, தாமரை மருவிய - தாமரை மலரிடத்தே
பொருந்திய, திருவடி வாமன் - திருவடிகளையுடைய அருகபரமனுடைய, பொன்னகர் -
அழகிய திருக்கோயில்களிடத்தே, விரவிய விழவொடு வேள்விக்கு ஒத்து - பொருந்திய
விழாவுடனே விருந்தோம்பல் முதலிய உதவித் தொழிலிலே