பக்கம் எண் :

பக்கம் : 968
 

     உளம் இயைந்து, கருவி அ வளநகர் - பல்வேறு தொகுதிகளையுடைய அந்த
வளமிக்க போதனமாநகரம், கண்குளிர்ந்ததே - கண்கள் குளிர்தற்குக் காரணமான
மகிழ்ச்சியை அடைந்தது, (எ - று.)

     நம்பியின் ஆட்சியிற்பட்ட வளநகரும் அருகபரமேட்டிக்கு விழாவெடுத்து
இல்லறத்தார்க்கு உரிய வேள்வியியற்றி நன்கு மகிழ்ந்ததென்க. கண்குளிர்தற்குக் காரணமான
மகிழ்ச்சியைக் காரியத்தின் மேலேற்றிக் கூறினார். வேள்வி - ஈண்டு இல்லறத்தார்க்குரிய
விருந்தோம்புதலாகிய அறமென்க. .

(424)

 
அரசியற் சருக்கம் முற்றிற்று.
 
பத்தாவது
சுயம்வரச் சருக்கம்

     இது, திவிட்டநம்பியின் மகளாகிய சோதிமாலையின் சுயம்வரச் செய்தியைக் கூறும்
பகுதியாம்.

     இதன்கண்:- சுயம்பிரபை தன் மகன் என வளர்த்த பாரிசாதத்திற்குக் காமவல்லியைக்
கடிமண நிகழ்த்தக் கருதித் திவிட்டற்குத் தோழிவாயிலாய் அறிவித்தலும், திவிட்டன்
விதூடகனுடன் பூம்பொழில் புகுதலும், திவிட்ட விதூடகர் நகைச்சுவை ததும்பிய
சொல்லாட்டமும், ஆங்குற்ற சுயம்பிரபை ஊடலும், திவிட்டன் ஊடல் தீர்த்தலும், பாரிசாத
காமவல்லி கடிமணவிழாவும், பொழில் விளையாடலும், திவிட்டன் வித்தையால் ஒரு
தெய்வத்தை யானையாக வரச் செய்தலும், மகளிர் அஞ்சுதலும், திவிட்டன் சுயம்பிரபைக்கு
அச்சந்தவிர்த்து யானையை அகற்றலும், நீர்விளையாடலும், காமவின்பச் சிறப்பும்,
சுயம்பிரபை கனாக்கண்டலும், திவிட்டன் கனாப்பயன் உரைத்தலும், சுயம்பிரபை விசயன்,
சோதிமாலை என்னும் மக்களைப் பெறுதலும், அருக்க கீர்த்தி, சுரேந்திரகாந்தத்து மன்னன்
மகள் சோதிமாலை என்பாளை மணந்து, அமிததேசன், சுதாரை என்ற இரு மக்களைப்
பெறுதலும், விசயன், சோதிமாலை என்னும் மக்கள் வளர்தற் சிறப்பும், சோதிமாலைக்குச்
சுயம்வரம் அமைத்தலும், சுயம்வரத்திற்குப் பல்வேறு மன்னர் மக்கள் வருகையும், சோதி
மாலைக்கு ஒரு தோழி மன்னர் வரலாறு கூறலும், சோதிமாலை, அமிததேசனை விழைந்து
மாலை சூட்டலும், மணவினையும், அருக்ககீர்த்தி தன் மகளாகிய சுதாரைக்குச் சுயம்வரம்
நாட்டலும், சுதாரை சுயம்வரத்தே விசயனுக்கு மாலை சூட்டலும், மணமக்களின் புதுமணக்
காமவின்பச் சிறப்பும், அருக்ககீர்த்தி முதலியோர் தத்தம் நகர்க்கேகலும் பிறவும் கூறப்படும்.

     தோற்றுவாய்


     *குறிப்பு:- சயமரச் சருக்கம் என்றும் ஏடுகளில் காணப்படுகின்றது.

 
 
1555. தேவரு 1மனிதர் தாமுஞ்
     செறிகழல் விஞ்சை யாரு
மேவருந் தகைய செல்வம்
     விருந்துபட் டனக டோற்ற
மாவர சழித்த செங்கண்
     மணிவண்ணன் மகிழ்ந்த காலைத்
தாவருஞ் செல்வ மொன்று
     தலைவந்த துரைக்க லுற்றேன்.
 
 

     (பாடம்) 1 மனிசர்