பக்கம் எண் :

பக்கம் : 969
 
     (இ - ள்.) தேவரும் மனிதர் தாமும் - தேவர்களும் மனிதர்களும், செறிகழல்
விஞ்சையாரும் - வீரக்கழல்கட்டிய விச்சாதரரும், மேவு அரும் - பெறற்கரிய, தகைய
செல்வம் - பெருமையுடைய செல்வங்கள், விருந்து பட்டனகள் - புதுமைமிக்கவைகளாகிய
இன்பங்களை, தோற்ற - தோற்றா நிற்ப, மா அரசு அழித்த செங்கண் மணிவண்ணன் -
விலங்கின் வேந்தாகிய அரிமாவைப் பிளந்து கொன்ற சிவந்த கண்ணையுடைய திவிட்டன்,
மகிழ்ந்த காலை - அவையிற்றை நுகர்ந்து மகிழ்ந்திருக்கும் பொழுதே, அரும் செல்வம்
ஒன்று - குற்றமற்ற பெருஞ் செல்வம் ஒன்று, தலைவந்தது உரைக்கலுற்றேன் -
திவிட்டநம்பிக்கு இனிதின் வந்தெய்தியதனை இனி உரைக்கத் தொடங்குகின்றேன், (எ - று.)

     தேவரும், மனிதரும், விச்சாதரருமாகிய எத்திறத்தாரும் எய்துதற்கரிய
பெருஞ்செல்வத்தை, நம்பி எய்தி, அச்செல்வம் தனக்கியல்பாகிய புதிய புதிய இன்பத்தைத்
தோற்றாநிற்ப, அவற்றை நுகர்ந்து மகிழ்ந்திருக்கும்போது, புதியதாகிய செல்வமொன்றும்
அவனை வந்தெய்தியது, அதனைக் கூறலுற்றேன் எனத் தேவர் கூறினார் என்க. இது
நுதலிப்புகுதல் என்னும் உத்தி,
    
     புதிய இன்பம் என்றது, காம நுகர்ச்சியை.

(425)

 
திவிட்டநம்பியின் காமவின்பச் சிறப்பு
1556. பானிலா நிறைவெண் டிங்கள்
     பனிக்கதிர் பரப்பி யாங்கு
மேனிலா விரியும் வெள்ளி
     வெண்குடை விசும்பு காப்பக்
1கோனிலா வுலக மோம்ப
     நிறீஇயபின் குவளை வண்ணன்
2மானிலா மடக்க ணோக்கின்
     மகளிர்தம் வலையிற் பட்டான
 
     (இ - ள்.) பால் நிலா நிறை வெண்திங்கள் - பால்போலும் வெண்ணிற முடைய
நிலவொளியோடு தனது வடிவம் நிறையப் பெற்ற வெள்ளிய முழுத்திங்கள், பனிக்கதிர்
பரப்பி ஆங்கு - குளிர்ந்த தனது நிலாவொளியை உலகத்திலே பரப்பினாற் போன்று,
மேல்நிலா விரியும் வெள்ளி வெண் குடை - விசும்பிடத்தே நிலவொளி பரப்பும் வெள்ளை
நிறமுடைய திங்கள் வெண்குடை, விசும்பு காப்ப - விண்ணோரையும் ஓம்புதல் செய்ய,
கோன்இலா உலகம் ஓம்ப நிறீஇயபின் - அரசிழந்த இரத்தினபல்லவத்தைத்
தலைநகராகவுடைய விச்சாதரர் உலகையும் அரசியல் அமைத்து ஓம்பும்படி நிறுவிய
பின்னர், குவளை வண்ணன் - நீலோற்பலம் போலும் நிறமுடைய திவிட்டநம்பி, மான்நிலா
மடக்கண் நோக்கின் மகளிர்தம் வலையிற் பட்டான் - மான்பிணையும் நாணி நில்லாது
கழிதற்குக் காரணமான போரழகுடைய மடப்பம் பொருந்திய விழிகளையுடைய, மகளிர்தம்
காமவலையில் சிக்கினான், (எ - று.)
 

     (பாடம்) 1கோனுலா யுலக. 2மானுலாமடங்க.