பக்கம் எண் :

பக்கம் : 970
 

     கோன் இலா உலகம் - அச்சுவகண்டனுடைய விஞ்சையருலகு. ஓம்பு நிறீஇ -
ஓம்புதற்குரிய அரசியலமைத்து.

     நம்பி, தன் வெண்குடை விண்ணவரையும் ஓம்பக் கோனிலா நகரம் அரசமைத்து,
ஓம்புதல் செய்த பின்னர், மடக்கணோக்கின் மகளிர் காமவலையிலே பட்டான் என்க.
தன்கட்பட்டாரை உய்ந்து கரையேற விடாமையாற் காமத்தை வலை என்றார் என்க.
சிறப்பொடு பூசனை முதலியன நன்கு நிகழத்துமாற்றால் வானோரையும் நம்பி குடை காத்த
தென்க.

(426)

 
1557. திருமணி நிழற்றுஞ் செம்பொ
     னெடுமுடி 1முகட்டோர் தெய்வக்
குருமணி யுமிழுஞ் சோதி
     குலவிய வொளிகொள் வட்டம்
புரிமணி யோத வேலிப்
     புதையிரு ளிரியல் செய்யக்
2கருமணி வண்ணன் றானே
     கதிரவன் தொழிலும் பூண்டான்.
 
     (இ - ள்.) திருமணி நிழற்றும் செம்பொன் நெடுமுடி - சிறந்த மணிகள் ஒளிரா நின்ற
செம்பொன்னாலியன்ற நீண்ட முடிக்கலனின், முகட்டு - உச்சியில் பதித்த, ஓர் தெய்வக்
குருமணி - ஒரு கடவுட்டன்மையுடைய நிறமிக்க மணி, உமிழும் சோதி - காலுகின்ற ஒளி,
குலவிய - பரவிய, ஒளிகொள்வட்டம் - ஒளிவட்டம், புரிமணி ஓதவேலி - விரும்புதற்குரிய
மணிகள் நிறைந்த கடலினை வேலியாகவுடைய உலகை, புதையிருள் இரியல் செய்ய -
மூடிய இருளை அகற்றாநிற்ப, கருமணி வண்ணணன்றானே - திவிட்டநம்பியே, கதிரவன்
தொழிலும் பூண்டான் - ஞாயிற்றுத் தேவனுடைய தொழிலையும் மேற்கொண்டான், (எ - று.)

     நம்பியின் முடியிலே பதித்த தெய்வக்குருமணி தன் ஒளியாலே உலகை மூடிய
இருளை அகற்றுதலாலே ஞாயிற்றின் தொழிலையும் தானே நடத்தினன் என்க.

(427)

 

     (பாடம்) 1 முகடோர். 2 கரிமணி.