அரிச்சந்திர
புராணம்
மூலமும் உரையும்
பிள்ளையார் வணக்கம்
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்
1. |
பெரும்புகழ்
பெறும்படி அருந்துயர் கெடும்படி
பிர்யம்பல வரும்ப டிஉளம்
விரும்பிய தனம்பெற மிகும்பெறு பதம்பெற
விளங்கிய தவம்செ யநெடும்
கரும்பவல் பெரும்பய றருங்கனி ரசங்கொடு
கவர்ந்ததென் உவந்த ருள்புரிந்
திருங்கரி முகன்சிறு சதங்கையொ டுகிண்கிணி
இலங்கிய பதம்பெ றுவனே. |
(இதன்
பொருள்) பெரும் புகழ் பெறும்படி - (உலகில்) பெரும்
புகழ் பெறவும், அருந்துயர் கெடும்படி - நீக்குதற்கு அரிய துன்பம்
நீங்கவும், பிர்யம் பல வரும்படி - பல விருப்பங்களும் நிறைவேறவும்,
உளம் விரும்பிய தனம் பெற - மனம் விரும்பிய அளவு பெருஞ் செல்வம்
பெறவும், மிகும் பெறு பதம் பெற - அடையத்தக்க மேலான பதமுத்திகள்
அடையவும், விளங்கிய தவம் செய - வீட்டிற்கேதுவான மெய்த்தவங்கள்
செய்யவும், நெடுங் கரும்பு அவல் பெரும்பயறு அருங்கனி ரசங்கொடு
கவர்ந்தது என் - நான் படைத்த பெரும்பயறு, அவல், கருப்பஞ்சாறு,
பழச்சாறு இவைகளின் இன்சுவை போன்ற இனிமையை நான் பெறும்படி,
உவந்து அருள் புரிந்து - என்னிடத்தில் மகிழ்ச்சியோடு எழுந்தருளிவந்து
அருள் புரிதலால், இருங் கரி முகன் சிறு சதங்கையொடு கிண்கிணி
இலங்கிய பதம் பெறுவன் - பெரிய யானைமுகக் கடவுளின் சிறு
சதங்கையும் பாதச்சிலம்பும் அணிந்த திருவடிகளைப் பெறுவேன்.
ஏகாரம்
: தேற்றம். புரிந்து : காரணப்பொருட்டாய வினையெச்சம்.
இன்சுவைப் பொருள்களை இறைவனுக்கு அளித்து இம்மைப் பயனும்
மறுமைப்பயனும் வீடுபேறும் உதவுகின்ற திருவடிகளைப் பெறுதலால் இதில்
அமைந்த அணி (பரிவர்த்தனை) பண்டமாற்று அணி.
(1)
|