Primary tabs
இன்னும் இந் நூலிலமைந்துள்ள சொற்சுவை, பொருட்சுவை, சந்தவின்பம், கற்பனை நயம், தொடையழகு, நடையழகு முதலிய சுவைகள் கற்பவருள்ளத்தைக் கவரும் இயல்பு வாய்ந்தவையாம். ஒவ்வொன்றையும் எடுத்து விளக்கப்புகின் விரியுமாதலின் விடுத்தாம். இக்காலத்து இந்நூலின் அருமை யறியாது பலர் எளிமையாகக் கூறி வருவது வெறுக்கத்தகுவதாம். அக்காலத்திற்கேற்ப வடமொழி சில கலந்து செய்யுளியற்றினர்போலும் இந் நூலாசிரியர். அதனை ஒரு குறையாகக்கொண்டு இந் நூலை எள்ளுதல் சிறிதும் பொருத்தமன்று. இளைஞர்கட்கு முதலில் இலக்கியப்பயிற்சிக்கு இதுபோன்ற நூல்களே வேண்டப்படுவன. கற்றவர் யாவரும் போற்றிக் காத்து வரவேண்டிய சிறப்பமைந்த நூல் இது. இந் நூல் கல்லாதவன் புலவனாகப் புகழ் பெறுதல் அரிதிலும் அரிதாம். ஆய்ந்துணர்க.