பக்கம் எண் :


10

பிறர் பொருளையே திருடி வாழ்கின்ற கள்வர் மேலோர்க்கு அறநெறி
உணர்த்துவது போலவும், சிறிய தெள்கு துள்ளிக் கருடனார்க்குப் பறவை
கற்பிப்பது என - சிறிய கொசுவானது துள்ளிப் பறந்து உயர்ந்த வானில்
நெடுநேரம் வட்டமிட்டுப் பறக்கும் ஆற்றல் வாய்ந்த கருடனுக்குப் பறக்கும்
வித்தையைக் கற்றுக்கொடுக்கும் தன்மை போலவும், அனந்தம் கண்
உள்ளார்க்குக் குருடனார் வழி காட்டல் என - கல்வி, ஞானம் ஆகிய
அகக்கண்களும் ஒளிமிகுந்த முகக்கண்களும் உடையவர்க்குக் குருடன்
வழிகாட்டுவது போலவும், பெரியோர் முன் சிறியேன் கூறல் உற்றேன் -
எல்லா அறிவும் உடைய பெரியோர் முன்னிலையில் சிற்றறிவினனாகிய
யான் இந்நூல் கூறத் தொடங்கினேன்.

     திருடனார், குருடனார் : உயர்வுப்பன்மை; ஆர் விகுதி இழிவுப்
பொருள் குறித்தது. நான்கு உவமைகளும் முறையே தலைமைபற்றியும்,
ஒழுக்கம்பற்றியும், ஆற்றல்பற்றியும், அறிவுபற்றியும் வந்தன.
                                                   (12)

    ஆக்கியோன் நெல்லூர் வீரகவிராயன்
13.

தண்கவிகைக் குரிசில்அரிச் சந்தி ரன்தன்
   சரிதம்அதைத் தாரணியோர் விருப்பம் எய்த
வண்கவிஞர் வகைவகையே வகுத்து ரைத்த
   வடமொழியும் தென்மொழியின் வழுவி லாத
வெண்கவியும் கண்டரங்கின் மாதர் ஆடல்
   விதம்கேட்டு மழைஎனவே வெருண்டு சோலைக்
கண்கவிகள் குதிபாயு நெல்லூர் வீர
   கவிராச னேவிருத்தக் கவிசெய் தானே.

     (இ - ள்.) தண் கவிகைக் குரிசில் அரிச்சந்திரன்தன் சரிதம் அதைத்
தாரணியோர் விருப்பம் எய்த - குளிர்ந்த வெண் கொற்றக் குடை நீழலில்
ஆண்ட அரிச்சந்திரன் சரித்திரத்தை உலகத்தார் கேட்க விருப்பங்கொள்ள,
வண் கவிஞர் வகை வகையே வகுத்து உரைத்த வடமொழியும்
தென்மொழியின் வழுவிலாத வெண் கவியும் கண்டு - மொழி வளம்
நிறைந்த கவிஞர்கள் பலவகையாப் பிரித்துக்கூறிய வடமொழிப்
பாடல்களையும் அழகிய தமிழ்மொழியின் குற்றமற்ற வெண்பாக்களையும்
உணர்ந்து, அரங்கின் மாதர் ஆடல் விதம் கேட்டு மழை எனவே
வெருண்டு சோலைக்கண் கவிகள் குதி பாயும் நெல்லூர் வீர கவிராசன்
விருத்தக் கவி செய்தான் - நடன மேடைகளில் பெண்களின் ஆடல் ஒலி
மத்தள ஒலிகளைக் கேட்டு அவற்றை மேக முழக்கம் என நடுங்கிச்
சோலையின் குரங்குகள் குதித்துத் தாவும் நெல்லூரில் வாழும் வீர
கவிராசன் என்னும் கவிஞன் இவ்விருத்தப் பாக்களைப் பாடினான்.
                                                    (13)

 
14. விதியின்அர சிழந்தஅரிச் சந்தி ரன்தன்
   வியன்கதையாம் வெண்கலியை விருத்தம் ஆக்கி
அதிவிதமாம் கலியுகத்தில் வருச காப்தம்
   ஆயிரத்து நானூற்று நாற்பத்து ஆறில்