|
சதுமறைதேர்
புல்ஆணித் திருமான் முன்னே
சக்கரதீர்த் தக்கரைமேன் மண்ட பத்துள்
கதிதருசீர் நெல்லூர்வாழ் வீரன் ஆசு
கவிராசன் கவிஅரங்கம் ஏற்றி னானே. |
(இ - ள்.)
விதியின் அரசு இழந்த அரிச்சந்திரன்தன் வியன் கதையாம்
வெண் கவியை விருத்தம் ஆக்கி - வாய்மை நிறுத்துமுறை யானே
அரசுரிமை இழந்த அரிச்சந்திரனுடைய பெருங்கதை பொருந்திய
வெண்பாக்களை விருத்தப்பாக்களால் பாடி, அதிவிதமாம் கலியுகத்தில் வரு
சகாப்தம் ஆயிரத்து நானூற்று நாற்பத்து ஆறில் - மிகுதி தலையெடுத்துள்ள
இக்கலியுகத்தில் சாலிவாகன சகாப்தம் ஆயிரத்து நானூற்று நாற்பத்தாறில்,
சது மறை தேர் புல்லாணித் தலத்தில் திருமால் சந்நிதியில்
சக்கரதீர்த்தக்கரை மேல் மண்டபத்துள் - சக்கரத்தீர்த்தக்கரைமேல்
அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் இருந்து, கதி தரு சீர் நெல்லூர் வாழ்
வீரன் ஆசுகவி ராசன் கவி அரங்கம் ஏறினான் - கவிகளை விரைந்து
பாடும் சிறப்புவாய்ந்த நெல்லூர் ஆசுகவித் தலைவன் வீரன் இவ்வரிச்சந்திர
புராணத்தை அரங்கேற்றினான்.
இப்பாயிரத்துள் ஆசிரியர் கடவுள் வாழ்த்தும்,
அவையடக்கமும்,
ஆக்கியோன் பெயரும் காலமும், திருப்புல்லாணித் திருமால் சந்நிதி
என்றதனால் களமும், தாரணியோர் விருப்பம் என்றதனாற் காரணமும்,
வடமொழியும் தென் தமிழின் வெண்கவியும் என்றதனால் வழியும்,
அரிச்சந்திரன் வியன் கதை என்றதனால் நூற்பெயரு, விதியின் அரசிழந்த
என்றதனால் மெய்ம்மையை நிலைநிறுத்தலாகிய நூல் நுதலிய பொருளும்
வழுவிலாத தென் தமிழின் வெண் கவி எனச் சிறப்பு அடைமொழி
கொடுத்து ஓதியதனால் தமிழ்மொழி வழங்கும் எல்லையே எல்லை எனவும்
கூறியுள்ளார்.
(14)
பாயிரம்
முற்றிற்று.
|