பக்கம் எண் :


101

சென்றாலும், போன திக்கு எலாம் தொடர்மின் என்று - போன திசைகள்
எல்லாம் பின் தொடர்ந்து செல்லுங்கள் என்று, எண் இலாச் சுடரை
ஏவினான் - தன் கணக்கற்ற கதிர்களைச் செலுத்தினான் (சூரியன்).

     சூரியன் திக்கெங்கும் கதிர் பரப்பியதை அரிச்சந்திரனுக்கு (சூரியன்)
இடர் விளைத்த இரா மடந்தையைத் தேடிப் பிடிக்கக் கைநீட்டியதாகக்
கவி தான் குறித்த குறிப்பை ஏற்றிக் கூறலின் தற்குறிப்பேற்ற அணி. புடவி
- பூமி. படர் - துன்பம். அறநிலை - அறநிலையங்களை என்றும் அறம்
நிலைபெற என்றும் கொள்ளலாம்.
                                                    (92)

 
   சிவன் பூசை மன்னவன் செய்வது
197. அலரிவந் தெழமுர சதிர ஆழிபோல்
புலரியில் அரனடி பூசித் தண்ணலும்
சிலர்சில சுடர்மணித் தேரி லேறினார்
பலர்பல கரிகளும் பரியும் ஏறினார்.

     (இ - ள்.) அலரி வந்து எழ - சூரியன் உதிக்க, முரசு ஆழி போல்
அதிர - முரசுகள் கடலொலிபோல் முழங்க, புலரியில் - விடியற் காலத்தில்,
அண்ணலும் அரன் அடி பூசித்து - பெருமை மிக்க அரிச்சந்திரனும்
சிவபெருமான் திருவடிப் பூசனை புரிந்து, சிலர் - தகுதி வாய்ந்த சிலருடன்,
சில சுடர் மணித் தேரில் ஏறினார் - சில ஒளி வீசுகின்ற அழகிய தேரில்
ஏறினார், பலர் பல கரிகளும் பரியும் ஏறினார். பலர் யானைகளிலும்
குதிரைகளிலும் ஏறினார்கள்.

     விடியவே சிவபூசை செய்யும் நியமம் பூண்டவனாதலின்,
அரிச்சந்திரன் அரனடி பூசித்து எழுந்தான் என்பது. 'பூசித்து' என்ற
செய்து என்னும் வாய்பாட்டெச்சம் இச் செய்யுளில் முடிவுறாது நின்று
அடுத்த கவியில் 'அகன்று' என்பதைக் கொண்டு பின் 'நண்ணினான்'
என்ற வினைமுற்றைக் கொண்டு முடியும். சிலர் ஏறினார் பலர் ஏறினார்
இவை இடைப்பிறவரல் என்று கொள்க.
                                                    (93)

 
    அண்ணல் மலைச்சாரலை நண்ணுதல்
198. அந்தமால் ஆற்றைவிட் டகன்று மன்னவன்
முந்தமால் கரிபரி நடப்ப மொய்த்துடன்
கந்தமா லைக்குழற் கடலுடன் வரச்
சந்தமால் வரைத்தடம் சாரல் நண்ணினான்.

     (இ - ள்.) மன்னவன் அந்த மால் ஆற்றை விட்டு அகன்று -
அரிச்சந்திரன் அந்தப் பேராற்றை விட்டு நீங்கி, முந்த - முன்னாலேயே,
மால் கரி பரி - பெரிய யானைகளும் குதிரைகளும், மொய்த்து உடன்
நடப்ப - நெருங்கிக் கூடவே நடந்து வரவும், கந்த மாலைக் குழல் கடல்
உடன் வர - வண்டுகள் மொய்த்த மணம் பொருந்திய மாலையணிந்த
கூந்தலையுடைய பெண்களாகிய கடல் கூடவே வரவும், சந்த மால் வரைத்
தடம் சாரல் நண்ணினான் சந்தனமரங்கள் நிறைந்த பெரிய மலைச்சாரலின்
இடத்தைச் சேர்ந்தான்.