பக்கம் எண் :


102

பெண்களின் தொகை மிகுதிபற்றிக் 'கடல்' என்றார். அரனடி பூசித்து (93)
என்று முந்திய கவியில் நின்ற வினையெச்சம் அகன்று நண்ணினான் என
அடுக்கி முடிவுறும். சந்தம் - சந்தன மரம், மால் ஆறு - பெரிய ஆறு.
கந்த மாலைக் குழல் என்பது அன்மொழித் தொகையாய் உடையவரை
யுணர்த்தியது. குழலையுடைய கடல் எனக் குறிப்பாற்
பொருளுணர்த்தியதாகவும் கொள்ளலாம்.
                                                    (94)

       பூஞ்சோலை வைகுதல்
199. அரிதாகி பலாசமா திலக மாசினி
விரிமலர்ச் சண்பகம் வேங்கை கோங்கமை
சொரிமலர்ச் சுரபுனை அசோகு துன்னிய
வரிமணற் காவிடை வந்து வைகினான்.

     (இ - ள்.) அரிதகி பலாசம் மா திலகம் ஆசினி விரி மலர்ச்
சண்பகம் வேங்கை கோங்கு அமை - கடுக்காய் பலாசம் மா மஞ்சாடி
ஆசினிப் பலா அலர்ந்த பூக்கள் நிறைந்த சண்பகம் வேங்கை கோங்கு
மூங்கில் முதலிய மரங்களும், சொரி மலர் சுரபுனை - பூக்களைச்
சொரிகின்ற சுரபுன்னை மரங்களும், அசோகு - அசோக மரங்களும்,
துன்னிய - நெருங்கிய, வரி மணல் கா இடை - வரி வரியாக மணல்
பரப்பப் பட்ட சோலையில், வந்து வைகினான் - வந்து தங்கினான்.

     புனை : புன்னை என்பதன் தொகுத்தல். பலாசம் - பலா மரம்;
புனமுருக்கு எனவும் கூறலாம்.
                                                    (95)

 
   அணிமலை அருவி சுனை நீராடுதல்
200. அலைசுனை ஆடவும் அருவி ஆடவும்
மலைமிசைப் பிடியும்வன் களிறு மானவே
சிலைநுத லாரும்செல் வரும்சென் றேறினா
முலையொடும் புயத்தொடும் நிகர்த்த மொய்ம்பின.

     (இ - ள்.) அலை சுனை ஆடவும் - அலைகளையுடைய சுனை நீர்
ஆடவும், அருவி ஆடவும் - அருவியில் குளிக்கவும், மலை மிசை -
மலையின்மேல், சிலை நுதலாரும் செல்வரும் - வில் போன்ற வளைந்த
புருவங்கள் அமைந்த நெற்றியையுடைய பெண்களும், ஆடவர்களும்,
பிடியும் வன் களிறும் மானவே - பெண் யானையும் வலிமைபொருந்திய
ஆண் யானையும் போல, சென்று ஏறினார் - போய் ஏறினார்கள்.
முலையொடும் புயத்தொடும் நிகர்த்த மொய்ம்பின - ஆடவரும் மகளிரும்
ஏறிய மலைகள் அவர்கள் புயங்களையும் கொங்கைகளையும் ஒத்த
வலிமை யுடையனவாயிருந்தன.

     பிடியும் களிறும் பெண்கள் ஆடவர் நடைக்கும், மலைகள்
தனங்களுக்கும் புயங்களுக்கும் உவமையாயின. மான : உவம உருவு. தம்
புயத்திற்கும் கொங்கைக்கும் ஒத்தவை என நினைத்து அம் மலைகளைத்
தம் கால்களான் மிதித்துத் தாழ்த்தினது போல இருந்தது என்பது கருத்து.
                                                    (96)