பக்கம் எண் :


109

     உம்மைகள் : எண்ணும்மைகள்; எலாம் : தொகுத்தல் விகாரம்; நடு
கல் - போர் வீரரின் புகழ் எழுதி நடுங் கல், நடு கற்கள் நிற்கும் இடங்கள்
பிளவுபட்டிருப்பதனால் அங்குச் சில்வண்டுகள் இருக்கும் எனவும்.
யானைகள் நடக்கும் வலிமையின்றி மருப்புகளை நிலத்திலூன்றி நிற்கும்
என்றும், அதனால் நிலம் பிளவுபட அவ்விடங்களிலும் சில்வண்டுகள்
சென்று தங்கும் எனவும் அறிக. "எழில் வேழம், வறனுழு நாஞ்சில்போன்
மருப்பூன்றி நிலஞ்சேர" என்று பிறருங் கூறுவது காண்க.
                                                   (108)

 
213. அந்தவெயி லத்தகல் விசும்பிடை வெடித்துவிழும்
   ஆனையின் நெடுந்
தந்தமணி யைத்துளி எனக்கருதி உண்டுழல்வ
   சாதக மெலாம்
வெந்தெரி கொளும்சரு கெழுந்துவிழு கங்குலில்
   விரிந்த நிழலில்
வந்தடரும் எண்கும்மரை யும்கடமை யுங்கலையும்
   மான்இன முமே.

     (இ - ள்.) சாதகம் எலாம் - சாதகப் பறவைகள் எல்லாம், அந்த
வெயிலத்து அகல் விசும்பு இடை வெடித்து விழும் ஆனையின் நெடுந்
தந்த மணியை - அந்நிலத்து வெய்யிலினால் அகன்ற வானில் வெடித்து
விழும் நீளமான ஆனைத் தந்தத்திலுள்ள முத்துக்களை, துளி எனக் கருதி
உண்டு உழல்வ - மழைத்துளி என நினைத்து விழுங்கி அலையும்,
கங்குலில் - இருட்டில், வெந்து எரி கொளும் சருகு எழுந்து விழும் -
வெந்து எரிகின்ற சருகுகள் எழுந்து விழுகின்ற, விரிந்த நிழலில் - பரந்த
நிழலில், எண்கும் மரையும் கடமையும் கலையும் மான் இனமும் வந்து
அடரும் - கரடிகளும் காட்டு மான்களும் காட்டுப் பசுக்களும்
கலைமான்களும் மான் வகைகளும் வந்து நெருங்கும்.

     சாதகம் - மழைத்துளியை அருந்தி வாழும் புள். யானைக்கொம்பு
முத்துப்பிறக்கும் இடங்களில் ஒன்று; சாதகப்புள் முத்தினை மழைத் துளி
என மயங்கலின் மயக்க அணி. எலாம் : தொகுத்தல்; உம்மைகள்
எண்ணும்மை. ஏகாரம் : ஈற்றசை. தந்த மணி - தந்தத்தினின்று வெடித்த
மணி என விரியும். ஐந்தனுருபும் பொருளும் உடன்றொக்க தொகை.
வெயில் + அத்து - அத்து : சாரியை.
                                                   (109)

 
214. மண்மகள் உடுத்ததிரை வாரிவட வைக்கனலை
   மாற்றி இதிலோர்
வெண்மனலை வைக்கில்அர மங்கையர் இரும்பதியும்
   வெந்து விடுமால்
கண்முழு தையும்புடை பெயர்ந்துகவ ரும்கடையு
   கத்தில் இதிலோர்
நுண்மணல் தெறித்துவிழ னும்பிரள யப்புனலை
   நுங்கி விடுமால்.