பக்கம் எண் :


120

கற்றேரும் கற்பரியும் கற்சிலையும் கற்கணையும்
   கன்னி முன்னே
பொற்றேரும் பொற்பரியும் பொற்சிலையும் பொற்கணையும்    பொலிந்த வன்றே.

     (இ - ள்.) அரசன் நல் தேரை விட்டு இறங்கி - அரிச்சந்திரப்
பேரரசன் தனது நல்ல தேரைவிட்டுக் கீழிறங்கி, நாயகியை நண்ணித்
தொழுது இறைஞ்சி - காளிதேவியை அடைந்து வணங்கி வழிபட்டு, முன்
தேரை நோக்குதலும் - தன் முன்னே நின்ற கல் தேரைப் பார்த்த
அளவில், முடி வேந்தன் கருணை விழி முனைகள் தாக்க - முடி
மன்னனுடைய கருணைக் கண்களின் கடைக்கண் பார்வை பொருந்துதலால்,
கல் தேரும் கல் பரியும் கல் சிலையும், கல் கணையும் - கல்லா யிருந்த
தேர்களும் குதிரைகளும் வில்லும் அம்பும், கன்னி முன்னே -
கன்னியாகிய காளியின் திருமுன்பே, பொன் தேரும் பொன் பரியும் பொன்
சிலையும் பொன் கணையும் பொலிந்த - பொன் தேரும் பொற் குதிரையும்
பொன் வில்லும் பொன்னம்புகளுமாக விளங்கின.

     அன்று + ஏ : அசை. அரிச்சந்திரன் காளியை வணங்கினதும்
இத்தெய்வத்தன்மையடைந்தான். அருளாற்றல் பெற்ற ஆசிரியன்
திருநோக்கால் மாணவனது பசு கரணங்கள் சிவகரணங்களாதல் போல்
இவனிடத்தில் காளி யருள் பதிந்தமையால் அருள் நோக்கால் கல்
பொன்னாயிற்று.
                                                   (126)

 
      மன்னவன் முன்னர்க் காளி வருதல்
231. முன்னாளிற் கல்லான முடித்தேரும் வாம்பரியும்
   மூரி வில்லும்
பொன்னாகக் கண்டிறைவன் புந்திமகிழ்ந் ததிசயித்துப்
   புளகம் எய்தி
என்னாக வந்ததிது எனக்கருதும் அவ்வளவில்
   இருண்ட மேனிப்
பொன்னாரும் களபமுலைப் புரிசடையாள் மணிவாயிற்
   புறத்து வந்தாள்.

     (இ - ள்.) முன் நாளில் கல்லான முடித்தேரும் வாம் பரியும் மூரி
வில்லும் - முந்தின நாட்களில் கல்லாயிருந்த சிகரத்தையுடைய தேரும்
தாவிச் செல்லும் குதிரைகளும் பெரிய வில்லும் அம்பும், பொன்னாகக்
கண்டு - பொன்னாக மாறினதைப் பார்த்து, இறைவன் மந்தி மகிழ்ந்து
அதிசயித்து அரிச்சந்திர அரசன் மனமகிழ்ந்து வியந்து, புளகம் எய்தி -
மெய்சிலிர்த்து, இது என்னாக வந்தது எனக் கருதும் அவ்வளவில் -
இம்மாறுதல் எவ்வாறு வந்தது என எண்ணிய மாத்திரத்தில், இருண்ட
மேனி பொன்னாரும் களப முலை புரிசடை யாள் - கரிய திருமேனியையும்
அழகுபொருந்திய சந்தனம் பூசிய தனங்களையும் சுருண்ட
சடையையுமுடைய காளிதேவி, மணி வாயிற் புறத்து வந்தாள் - அழகிய
கோயில் வாயிலுக்கு வெளியே வந்து தோன்றினாள்.