பக்கம் எண் :


123

      கன்னோசி நாட்டை யணுகுதல்

    
    கலி விருத்தம்

235. வாள்செலச் சிலைசெல மாத ரார்செல
வாள்செலத் தேர்செல ஆனை செல்லநீள்
தோள்செலும் சுடர்மணித் தொடியி னான்பல
நாள்செலக் கனோசிமா நாட்டை நண்ணினான்.

     (இ - ள்.) வாள் செல சிலை செல மாதரார் செல ஆள் செல தேர்
செல ஆனை செல்ல வாள் வில் பெண்கள் காலாட்படை தேர் யானை
முதலியன செல்லவும், நீள் தோள் செலும் சுடர் மணித் தொடியினான் -
நீண்ட தோள்களிலே செல்லும்படியான ஒளிபொருந்திய மணிகள் பதித்த,
தோள் அணிகளை அணிந்த அரிச்சந்திரன், பல நாள் செல - பல நாட்கள்
கழிந்தபின், கனோசி மா நாட்டை நண்ணினான் - கனோசிமாநாட்டைப்
போய்ச் சேர்ந்தான்.

     செல : செல்ல என்பதன் தொகுத்தல்; மாதரார் - ஆர் : பகுதிப்
பொருள் விகுதி; செலும் என்பதும் அது.
                                                   (131)

      கன்னோசி நாட்டின் வளம்
236. தாழையின் முதிர்பழம் கமுகின் தாறுதே
மாழையின் கனிவிழை வருக்கை யின்பலம்
கூழைவெண் குரங்கயல் குதிப்பக் கூன்குலை
வாழையின் கனிஎலா மடிய வீழும்ஆல்.

     (இ - ள்.) தாழையின் முதிர் பழம் கமுகின் தாறு தேம் மாழையின்
கனி விழை வருக்கையின் பலம் - தென்னைமரங்களின் முற்றிய
நெற்றுகளும் பாக்கு மரத்தின் குலைகளும் இனிய மாம்பழங்களும்
விரும்பத்தக்க பலாப்பழங்களும், கூழை வெண் குரங்கு அயல் குதிப்ப
குட்டையான வெண்ணிறக் குரங்குகள் பக்கத்தில் குதிப்பதனால், கூன்
குலை வாழையின் கனி எலாம் மடிய வீழும் - வளைந்த வாழைக்
குலைகளின் பழங்களெல்லாம் சிதைந்து சிந்திவிழும்.

     எலாம் : எல்லாம் என்பதன் தொகுத்தல்; முதிர் பழம், விழை
வருக்கை : வினைத்தொகை; குதிப்ப : காரணப்பொருட்டாய
செயவெனெச்சம். கூழை வெண் குரங்கு குதிப்ப தாழை ..... முதிர் பழம்,
கழுகின்றாறு, மாழையின் கனி வாழையின் கனி எலாம் மடிய வீழும்
எனக் கூட்டுக. ஆல் : அசை. "காய்மாண்ட தெங்கின் பழம்வீழ ..............
தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும்" என்ற சிந்தாமணிச்
செய்யுளின் கருத்தை யுட்கொண்டது.
                                                   (132)

 
237. கூன்சடு வன்தலை குரும்பை வீழ்தலின்
தீங்கனி வருக்கையில் புதைத்த செம்முக
வான்கவி வால்பிடித் திழுத்து மந்திமுன்
றான்கொடு கதலியும் படப்பை சாரும்ஆல்.