பக்கம் எண் :


125

நீள்கனம் குழைகளும் முகமும் நீலக்கண்
வாள்களும் வாய்களும் வாலி காட்டுமே.

     (இ - ள்.) சோலை தையலார் தாள்களும் துடைகளும் மணித்
தோள்களும் முலைகளும் காட்டுவ - கன்னோசி நாட்டின் சோலைகள்
அசோகின் தளிர்களால் பெண்களின் கால்களையும் வாழைகளாலே
துடைகளையும் மூங்கில்களாலே அழகிய தோள்களையும், கோங்கு
அரும்புகளாலே கொங்கைகளையும் காட்டுகின்றன. வாவி நீள் கனம்
குழைகளும் முகமும் நீலக் கண் வாள்களும் வாய்களும் காட்டும் -
அங்குள்ள குளங்கள் வள்ளைக்கொடிகளாலே நீண்ட கனமான
செவிகளையும், தாமரை மலர்களாலே முகங்களையும், நீலோற்பல
மலர்களாலே ஒளிபொருந்திய கண்களையும் செவ்வாம்பல்களாலே
வாய்களையும் காட்டுகின்றன.

     சோலைகளில் அசோகந் தளிர்களும் வாழைகளும் கமுகமரங்களும்
கோங்கரும்புகளும் இருக்கும். அவை முறையே தாள், துடை தோள், முலை
இவற்றிற்கு உவதையாம். ஆதலால் சோலை அவற்றைக் காட்டுவ என்றார்.
வாவிகளில் வள்ளைக்கொடியும், தாமரைப்பூவும். நீலமலரும், செவ்வாம்பல்
மலரும் இருக்கும். அவை முறையே செவிக்கும் முகத்திற்கும் கண்ணுக்கும்
வாய்க்கும் உவமையாம். ஆதலால் வாவி அவற்றைக் காட்டும் என்றார்.
                                                   (135)

 
240. திகுதிகென் றலைபுனல் மதகு சிந்தவும்
பகுதியுட் பகுதியுட் பற்ற றாதென
வெகுதிரைப் பேரொலி வேலை ஏழுமுட்
புகுதினு நிறைவுறா தளவில் பொய்கையே.

     (இ - ள்.) மதகு திகு திகு என்று அலை புனல் சிந்தவும் -
மதகுகளின் வழியாகத் திகு திகு என்று அலைகளுடன் தண்ணீர் பாயவும்,
பகுதியுள் பகுதியுள் பற்று அறாது என - காலப் பகுதிதொறும் காலப்
பகுதிதொறும் நீரைத் தேக்கியிருத்தல் குறையாதென்று சொல்லும் படி
வெகு திரைப் பேர் ஒலி வேலை ஏழும் - மிகுந்த அலைகளையுடைய
பேரொலி முழக்குகின்ற ஏழு கடல்களும், உட்புகுதினும் - அப்
பொய்கைகளினுள்ளே புகுந்தாலும், நிறைவுறாது - அத்தண்ணீரால்
நிறைவுகொள்ளாது, அளவில் பொய்கை - இத்தகைய பொய்கைகள்
அளவில்லாதன இருந்தன.

     பொய்கையின் நீரளவுக்கு ஏழு கடல்நீரளவும் காணாது என்பதாம்.
எவ்வளவு நீரும் தேங்கத்தக்க பெரிய குளம் என்பதாம். மதகின் வழியே
மிகுதியாகத் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தாலும் நீர் வற்றாது என்பதாம்.

     திகுதிகு : ஒலிக்குறிப்பு; இடைச்சொல்; இரட்டைக்கிளவி என்பதும்
இது. ஏகாரம் : ஈற்றசை.

                                                   (136)

 
241. துகிரினும் சிவந்தகாற் றுணைவெண் பேடையோ
டுகிரினும் அலகினும் ஒடுக்கு மீனுடன்
றிகிரிஅம் புள்புடை பெயரத் திண்சிறைப்
பகிரினீர் கடையுகப் பௌவ மன்னதே.