பக்கம் எண் :


126

     (இ - ள்.) துகிரினும் சிவந்த கால் துணை வெண் பேடையொடு -
பவளத்தைப் பார்க்கிலும் சிவந்த கால்களிரண்டுடைய வெண்ணிறமான
சக்கரவாகப் பேடுடனே, உகிரினும் அலகினும் ஒடுக்கு மீனுடன் - கால்
நகத்தினாலும் அலகினாலும் பிடித்து ஒடுக்கப்பட்ட மீன்களுடன், அம்
திகிரிப் புள் - அழகிய சக்கரவாகப் பறவைகள், படை பெயர -
பக்கங்களிற் பறந்து போக, திண் சிறைப் பகிரின் நீர் - உறுதியான
கரைகளினின்று மதகின் வழியே பகுத்துவிட்ட நீரின் அளவு, கடை உகப்
பௌவம் அன்னது - கடைஊழிக்காலத்திற் பொங்கி வருகிற கடல்போல்
மேலெழுந்து வரும்.

     உகிரின், அலகின் : ஐந்தனுருபுகள் மூன்றனுருபுப் பொருளில்
வந்தன. இது உருபுமயக்கம். உகிரினும் - எண்ணும்மை; ஏகாரம் :
ஈற்றசை. திகிரி - சக்கரம். அம் புள் - அழகிய பறவை; சக்கரவாகப்
புள்ளை உணர்த்தியது. பௌவம் - கடல்.
                                                   (137)

 
242. கூடிய பிறநலக் கொள்கை கண்டழன்
றூடிய ஓதிமம் ஒளித்த தாமரை
வாடிய வாறுகண் டாவி மாய்ந்திடத்
தேடிய சேவறன் னுளந் தெளித்திடும்.

     (இ - ள்.) கூடிய பிற நலக் கொள்கை கண்டு உழன்று ஊடிய
ஓதிமம் - மற்றோர் அன்னப்பேட்டினைக் கூடித் தன் ஆண் அன்னம்
இன்பங்கொண்டதனைக் கண்டு வருந்திப் பணங்கிய பெட்டை
அன்னமானது, ஒளித்த தாமரை - ஆண் அன்னத்தை விட்டு ஒடி ஒளித்த
தாமரைப்பூ வாடியவாறு கண்டு - குவிந்த தன்மையைக் கண்டு, ஆவி
மாய்ந்திடத் தேடிய சேவல் தன் உளம் - (தனது துணை தாமரை மலர்
குவிதலால் உள்ளிருந்து இறந்துவிட்டதென்று தானும்) உயிர் விட நாடிய
ஆண் அன்னத்தின் மனத்தினை தெளித்திடும் - பெண் அன்னம்
அப்பூவிலிருந்து காட்சியளித்துத் தேற்றும்.

     இணை பிரியா அன்னங்களின் அன்பினைப் புலப்படுத்தியவாறு.
பெண் அன்னத்தைக் காணாது கலங்கி உயிர் துறக்க வழிநாடிய ஆண்
அன்னம் தன் துணை கண்டு கலக்கந் தெளியும் என்பதாம்.
                                                   (138)

 
243. காற்றினிற் கலைந்துயர் சினையிற் கான்றதேன்
ஆற்றினிற் பரந்தகல் வாலி யண்மியே
சேற்றினிற் பழகிய வயலிற் செந்நெலின்
நாற்றினிற் பரப்பன நாலு பாலுமே.

     (இ - ள்.) காற்றினின் கலைந்து உயர் சினையிற் கான்ற தேன்
வீசுகின்ற காற்றினால் கலைந்து உயர்ந்த கிளைகளிலுள்ள தேன்
கூடுகளினின்று ஒழுகின தேனானது, ஆற்றினில் பரந்து அகல் வாவி
அண்மி - ஆற்றல் போய்ப் பரந்து அகன்ற குளத்தினைச் சேர்ந்து,
சேற்றினில் பழகிய வயலில் - சேற்றினால் இறுகுதலுடைய வயல்களில்,
நாலு பாலும் செந்நெல்லின் நாற்றினில் பரப்பன - நாலுபக்கங்களிலும்
செந்நெல் நாற்றுகளில் பரவிப் பாயும்.