பக்கம் எண் :


127

காற்றினில் : ஐந்தனுருபு ஏதுப்பொருளில் வந்தது; கான்ற - கால் : பகுதி;
ற் : இறந்தகால இடைநிலை; அ : பெயரெச்ச விகுதி; ஆற்றினில் -
ஐந்தனுருபு ஒப்புப்பொருளில் வந்தது. ஏகாரம் : அசை. பாலும் -
முற்றும்மை. தேன் வழிந்தது செல்லுமிடங்கள் பலவாதலின் 'பரப்பன'
எனப் பன்மையால் முடித்தனர்.
                                                   (139)

 
244. பிணையன விழியினார் நடைபெறக் கெழீஇத்
துணைபுணர் ஓதிமம் தொடர்ந்து பின்வரத்
திணைபல படர்ந்து திண்தே ரிழிந்துபின்
இணைமருப் பியானையி னெருத்தத் தேறினான்.

     (இ - ள்.) பிணையன விழியினார் நடைபெற - மான்போலும்
கண்களையுடைய பெண்களின் நடையினைத் தானும் பெற்றுக் கொள்ள,
துணை புணர் ஓதிமம் கெழீஇத் தொடர்ந்து பின் வர - துணையோடு
கூடிய அன்னம் சேர்ந்து பின்தொடர்ந்து வர, திணை பல படர்ந்து திண்
தேர் இழிந்துபின் - ஐந்திணை நிலங்களைக் கடந்து தேரினின்று இறங்கிப்
பின்னர், இணை மருப்பு யானையின் எருத்தத்து ஏறினான் - இரண்டு
கொம்புகளையுடைய யானையின் பிடரியின்மேல் அரிச்சந்திரன் ஏறினான்.

     கெழீஇ : சொல்லிசை யளபெடை; மருப்பி யானை : குற்றிய லிகரம்;
விழியினார் நடை என ஆறாம்வேற்றுமை யுருபு விரிக்க. ஆணும்
பெண்ணும் நடை கற்பதற்குப் பின் வந்தன. திணை - இடம், நிலம்.
"பைந்தொடியாள் பாதநடை கற்பான் வந்தடைந்தேம் நாம்" என்று பிறருங்
கூறியது காண்க.
                                                   (140)

 
      கங்கைக்கரை யடுத்தல்
245. இடிஎன முழங்கிட வியம்பியங் களால்
வெடிபடும் உலகமும் விசும்பும் என்னநீள்
கொடிகளும் குடைகளும் குழுமக் கொற்றவன்
கடிகமழ் கங்கையின் கரையை நண்ணினான்.

     (இ - ள்.) இடி என முழங்கிட இயம்பு இயங்களால் வெடி படும்
உலகமும் விசும்பும் என்ன - இடியைப்போல் முழங்கும்படி ஒலிக்கிற
இசைக் கருவிகளின் பேரொலியால் உலகமும், வானும் பிளந்துவிடும் என்று
கூறும்படி, நீள் கொடிகளும் குடைகளும் குழும - நீண்ட கொடிகளும்
குடைகளும் சேர்ந்து எடுத்துப் பிடிக்க, கொற்றவன் கடி கமழ் கங்கையின்
கரையை நண்ணினான் - அரிச்சந்திரப் பேரரசன் மணங்கமழ்கின்ற
கங்கைக்கரையை அடைந்தான்.

     இடிபோல முழங்கும் பல இயங்களின் ஒலி கேட்டவர் மண்ணும்
விண்ணும் பிளந்து போகும் என்று கூறினார்கள் என்றும், அவ்வாறு
பலரும் கூறும்படியான பேரொலியுடன் கங்கைக்கரையை நண்ணினன்
அரிச்சந்திரன் என்றும் கொள்க. இயம்பியங்கள் : வினைத்தொகை. கமழ்
கங்கை என்பதும் அது.
                                                   (141)