பக்கம் எண் :


134

     சூரியனுக்கு மத்தியில் சந்திரன் தோன்றுதல் இன்மையின் இல்
பொருளுவமையணி; நேத்திரத்தின் : ஐந்தனுருபு ஒப்புப்பொருளில் வந்தது.

     ஏகாரம் : ஈற்றசை. கடி : உரிச்சொல். கதிர் தன் - தன்; சாரியை.
                                                   (154)

 
    அரிச்சந்திரனும் படைகளும் வாயிலுட் புகுதல்
259. அலங்கல்தங்கு வேலினான்அ னீகவெள்ளம் அந்நகர்ப் பொலங்கலந்த மாமதில் புறம்பெலா நிறைந்துபின் நிலங்கவர்ந் திடச்செறிந்த நீலவேலை ஏழும்ஓர் பிலங்க லந்த தென்னவே பெருத்தவாயில் புக்கதே.

     (இ - ள்.) அலங்கல் தங்கு வேலினான் அனீக வெள்ளம் -
வெற்றி மாலை தாங்கிய வேலாயுதத்தையுடைய அரிச்சந்திரனது சேனை
வெள்ளம், அ நகர் பொலம் கலந்த மா மதில் புறம்பு எலாம் நிறைந்து -
அந்த நகரத்தின் அழகுபொருந்திய பெரிய மதில்களின் வெளியிலெல்லாம்
நிறைந்து, பின் - பின்பு, நிலம் கவர்ந்திடச் செறிந்த நீல வேலை ஏழும் -
உலகத்தை விழுங்கும்படி நிறைந்த நீலநிறமான ஏழு கடல்களும், ஒரு
பிலம் கலந்தது என்னவே - ஒரு குகைக்குள் போய்ப் புகுந்தாற்போல,
பெருத்த வாயில் புக்கது - பெரிய கோட்டை வாசலில் புகுந்தது.

     எலாம் : எல்லாம் என்பதன் தொகுத்தல்; ஏழும் - உம்மை
முற்றும்மை. இல்பொருளுவமையணி; நீலக்கடலெழும் ஒரு குகைக்குள்
போய்ப் புகுவது உலகில் நிகழாத செயல். அதனை உவமையாகக்
கூறியதால்.
                                                   (155)

 
      அரிச்சந்திரன் மண்டபஞ் சேர்தல்
260. தோரணத்து நீழல்மன்னு சோதிரத்ந வேதிகைப்
பூரணக்கு டங்களும் பொலிந்திலங்கு தீபமும்
காரணத்த மைச்சர்தந் தெருக்களும் கடந்துபோய்
வாரணத்தி ழிந்துமன்னன் மண்டபத்தில் எய்தினான்.

     (இ - ள்.) மன்னன் - அரிச்சந்திரனாகிய அரசன், தோரணத்து
நீழல் மன்னு சோதி ரத்ந வேதிகை - தோரணங்களின் நிழல் படுகின்ற
ஒளி பொருந்திய மாணிக்கத் திண்ணைகளின்மேல், பூரணக் குடங்களும்
பொலிந்து இலங்கு தீபமும் - நீர் நிறைந்த குடங்களும் சிறந்து
விளங்குகின்ற விளக்குகளும் காரணத்து அமைச்சர்தம் தெருக்களும்
கடந்து போய் - அரசாளுங் காரணத்தையுடைய அமைச்சர் வீதிகளும்
கடந்துபோய், வாரணத்து இழிந்து மண்டபத்தில் எய்தினான் -
யானையினின்று இறங்கி மன்னர் தங்கும் மண்டபத்தை அடைந்தான்.

     நீழல் - நிழல்; இது நீட்டல் விகாரம்; வாரணத் திழிந்து : ஐந்தாம்
வேற்றுமைத்தொகை. ரத்நம் - வடமொழி. குடங்களும் தீபமும்
தெருக்களும் கண்டு அவற்றைக் கடந்து மண்டபம் எய்தினான் என்று
கூட்டுக.
                                                   (156)