பக்கம் எண் :


137

       சந்திரதயன் சிந்தையி லெண்ணல்  
265. சித்திரம் போல மன்னன் இருந்தனன் திகைத்தும் வேறோர்
உத்தரம் உரையா னாகி உள்ளுளே மகிழ்ச்சி பொங்க
அத்திர விழியாண் மேனா ளருந்தவம் உடையா ளாயின்
இத்திருப் புயமும் மார்பும் எய்தும்என் றெண்ணி நைந்தான்.

     (இ - ள்.) மன்னன் திகைத்தும் வேறு ஓர் உத்தரம் உரையானாகி
உள் உளே மகிழ்ச்சி பொங்க சித்திரம் போல இருந்தனன் - சந்திரதயன்
அரிச்சந்திரன் அழகைக் கண்டு திகைப்பெய்தியும் வேறு ஒன்றும்
பேசாதவனாய் மனமகிழ்ச்சி பொங்கச் சித்திரம்போல இருந்தான். அத்திர
விழியான் மேல் நாள் அருந்தவம் உடையாளாயின் இத் திருப்புயமும்
மார்பும் எய்தும் என்று உண்ணி நைந்தான் - அம்புபோன்ற
கண்களையுடைய சந்திரமதி முற்பிறவியில் அருந்தவம் புரிந்திருந்தால்
அரிச்சந்திர மன்னனுடைய இவ்வழகிய தோள்களையும் மார்பினையும்
அடைவாள் தவம் இல்லையேல் எங்ஙனம் அடைதல் கூடும் என்று
எண்ணி மனம் வருந்தினான்.

     அரசன் திகைத்துங்கூட வாய்விட்டு வியப்பு மொழிகள் கூற வில்லை
என்பது பட நின்றமையின் உம்மை உயர்வுசிறப்பு. உரையான் : எதிர்மறை
வினையாலணையும்பெயர்; உள் : முன்னையது உள்ளத்தைக் குறித்தது.
பின்னையது ஏழாம்வேற்றுமையுருபு. எய்தும் : செய்யும் என்னு முற்று.
                                                    (161)

  எவ்வாறு நிகழுமோ என எண்ணி மதிதயன் மயங்கல்   
266. சிவன்நமக் கருளிச் செய்த திருவுளப் படியே காண்ப
திவன்தனக் கெய்து மாயின் ஏழையும் யானும் செய்த
தவமும்மா தவமாம் அல்லாற் றவமும்என் தனையைப் பேறும் அவம்என எண்ணி எண்ணி அளவிலா தழுங்க லுற்றான்.

     (இ - ள்.) சிவன் நமக்கு அருளிச்செய்த திரு உளப்படியே -
சிவபெருமான் நமக்குக் கூறிய திருவருட் கூற்றின்படியே, காண்பது இவன்
தனக்கு எய்து மாகில் - நம் மகள் கழுத்தில் இயற்கையா யமைந்த
திருமங்கலியம் இவனால் காணப்படுமானால், ஏழையும் யானும் செய்த
தவமும் மா தவமாம் - சந்திரமதியும் நானும் செய்த தவம் பெருந்
தவமாகும், அல்லால் - காணப்பெறாதாயின், தவமும் என் தனையைப்
பேறும் அவம் என எண்ணிஎண்ணி - நான் செய்த தவமும் என்
மகட்பேறும் வீண் என்று நினைத்து நினைத்து, அளவு இலாது அழுங்கல்
உற்றான் - கணக்கிலாத் துயர் அடைந்தான்.

     காண்பது : தொழிற்பெயர்; மாதவம் : உரிச்சொற்றொடர். தவமும் -
உம்மை : முன்னையது உயர்வுசிறப்பு; பின்னையது எண்ணுப் பொருளது;
எண்ணி எண்ணி : அடுக்கு இடைவிடாமைமேற்று.
                                                   (162)

 
    சந்திரதயன் 'நாளை வருக' என நன்மொழி கூறுதல்
267. காளைதன் முகத்தை நோக்கிக் கடவதொன் றில்லை எம்மால் வேளைவென் றிலங்கு கண்ணான் விதித்தவா றளித்தும் யாமே