பக்கம் எண் :


138

வாளைவென் றிலங்கு கண்ணாள் மாமணக் காவ ணத்துள் நாளைவந் தெய்தும் இன்று நடமினுஞ் சார்பில் என்றான்.

     (இ - ள்.) காளை தன் முகத்தை நோக்கி - சந்திரதயன் வீரனான
அரிச்சந்திரன் முகத்தைப் பார்த்து, எம்மால் கடவது ஒன்று இல்லை - எம்
விருப்பம்போல் எங்களால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை, வேளை
வென்று இலங்கு கண்னான் - மன்மதனை எரித்து விளங்குகின்ற
நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான், விதித்த ஆறே யாம் அளித்தும் -
அருளிச்செய்தபடியே நாங்கள் சந்திரமதியைக் கொடுப்போம். வாளை
வென்று இலங்கு கண்ணாள் - வாளினை வென்று ஒளிமிக்கு விளங்குகின்ற
கண்களையுடைய சந்திரமதி, மா மணக் காவணத்துள் - சிறந்த திருமணப்
பந்தலில், நாளை வந்து எய்தும் - நாளை வந்து சேர்வாள், இன்று நும்
சார்பு இல் நடமின் என்றான் - நீங்கள் இன்றைக்கு உங்கள் தங்கும்
இடங்களுக்குச் செல்லுங்கள் என்று கூறினான்.

     காளை : உவமையாகுபெயர்; மன்மதன் தேவர்கள்
வேண்டுகோளின்படி சிவபெருமானை மயக்கி யோகத்திருத்தலைக் கலைக்க
முயன்றான். சிவபெருமான் நெற்றிக்கண்ணை விழித்து மன்மதனை எரித்துப்
பின் உமாதேவியை மணந்து முருகனைத் தோற்றுவித்தார். மா மணம் :
உரிச்சொற்றொடர்; அளித்தும் : தன்மைப்பன்மை வினைமுற்று. ஏகாரத்தை
ஆறு என்பதனோடுங் கூட்டுக.

     ஏகாரம் : தேற்றம்; எய்தும் : செய்யும் என்னும் வாய்பாட்டு
வினைமுற்று; இல் : நான்காம்வேற்றுமைத்தொகை; நடமின் :
முன்னிலைப்பன்மை வினைமுற்று.
                                                   (163)

  மதிதயன் மன்னவரைத் தத்தம் மனைக்குப் போக்கி
           மாளிகை சேர்தல்
268. கைத்தலம் சற்று நீட்டி மதிதயன் கட்டு ரைக்கத்
தத்தமக் களித்த சார்பில் சார்ந்தனர் அரசர் எல்லாம்
உத்தம குணத்தி னானும் ஓங்கு மண்டபத்தி னீங்கி
மத்தகக் களிற்றி லேறி மாளிகை இடத்துச் சார்ந்தான்.

     (இ - ள்.) மதிதயன் கைத்தலம் சற்று நீட்டிக் கட்டுரைக்க -
சந்திரதயன் கையைச் சிறிது நீட்டி நடவுங்கள் என்று சைகையுடன் உறுதி
கூற, அரசர் எல்லாம் தத்தமக்கு அளித்த சார்பில் சார்ந்தனர் - அரசர்கள்
எல்லாரும் தங்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தங்கும் இடங்களை
அடைந்தனர், உத்தம குணத்தினானும் ஓங்கு மண்டபத்தின் நீங்கி -
உத்தமமான நற்குணங்களுடைய அரிச்சந்திரனும் உயர்ந்த
கொலுமண்டபத்தை விட்டு அகன்று, மத்தகக் களிற்றில் ஏறி மாளிகை
யிடத்துச் சார்ந்தான் - மத்தங்கத்தையுடைய யானைமே லேறித் தான்
தங்கும் இடத்தை அடைந்தான்.

     தம் + தம் - தத்தம்.
                                                   (164)