பக்கம் எண் :


14

     (இ - ள்.) மாரி பம்பல் - மழைத்துளியானது, விண்ணோர் அமுது
மீனம் திகழ் வேலையில் தோன்றியது என்ன - தேவாமிர்தமானது மீன்கள்
விளங்குகின்ற கடலில் தோன்றிய காரணத்தினால், தானம் திகழ்
தாத்கிரியைப் பெருந்தாழி ஆக்கி - பரந்த இடம் விளங்குகின்ற பூமியைப்
பெரிய பானையாக்கி, வானம்தனை நெய் அரி வட்டகை ஆக்கி -
வானத்தைப் பன்னாடை வட்டகையாக்கி, விட்ட பானம் தனை ஒத்து
விழுந்தது - வடிகட்டி விட்ட அமுத பானம் போன்று தெளிந்து விழுந்தது.

     மாரி பம்பல் : சாதி ஒருமை. மீனாற்றம் பொருந்திய பாற்கடலிற்
றோன்றியது, ஆதலால் அதிலுள்ள கோது நீக்குதற்குப் பூமியைத் தாழியாக
வைத்து வானத்தைப் பன்னாடையாக வைத்து அமுதத்தை வார்த்ததுபோலத்
தெளிவவாக மழைத்துளி விழுந்தது. விண்ணோர்கள் அமுதத்தை
வடிகட்டியதுபோலத் தோன்றியது மழைத்துளி வீழ்ந்த காட்சியெனக்
கற்பித்தார் ஆசிரியர். இது தற்குறிப்பணி.
                                                           (4)

            வெள்ளச் சிறப்பு
19. விண்ணிற் பொழியும் கணைமாரி விழுந்து தைத்த புண்ணிற் பொழியும் குருதித் திரள்போல எங்கும் மண்ணிற் பொலிஇந் திரகோபம் மலிந்து தோன்றக் கண்ணிற் கமையாப் புனல்வந்து கலித்த தன்றே.

     (இ - ள்.) விண்ணில் பொழியும் கணை மாரி விழுந்து தைத்த
புண்ணில் பொழியும் குருதித் திரள்போல - ஆகாயத்திலிருந்து
சரமாரியாகப் பொழிகின்ற அம்புகள் பாய்ந்த புண்ணிலிருந்து
பெருகியோடுகின்ற இரத்த வெள்ளம்போல, மண்ணில் எங்கும் பொலி
இந்திர கோபம் மலிந்து தோன்ற - தரையில் எல்லா இடங்களிலும் மழை
பெய்யும்போது விளங்கித் தோன்றுகின்ற செந்நிறமான இந்திர கோபப்
பூச்சிகள் நிறைந்து தோன்ற, கண்ணிற்கு அமையாப் புனல் வந்து கவித்தது
- கண்பார்வைக்குள் அடங்காதபடி அவ்வளவு அதிகமாக மழை வெள்ளம்
வந்து இரைச்சலோடு ஓடியது.

     அன்று, ஏ : அசைகள். அழையா : ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம்.

     இந்திர கோபம் என்னும் பூச்சி மழைக்காலத்தில் மண்மேல்
நெருக்கமாக ஊர்ந்துவரும். விண்ணினின்று விழும் மழைத்துளிகளை
அம்புகளாகவும் மண்ணின்மேல் ஊர்ந்துவரும் இந்திர கோபங்களை
மண்ணில் அவ்வம்பு தைத்த புண்வழி பொங்கிவரும் குருதியாகவும்
குறித்தார். இதுவும் தற்குறிப்பணி.
                                                     (5)

20. கள்ளம் கொலைகட் புலைகாமம்என் றைந்தும் அற்றார்க்
குள்ளம் தெளிந்தோர் தரும்உத்தம தானம் என்னப்
பள்ளம் திடர்மால் வரைகானகப் பக்கம் எங்கும்
வெள்ளம் பெருகிப் பரந்தோடி விரைந்த தன்றே.