பக்கம் எண் :


141

    'உறுப்புக்கள் மடவார் உயிருண்ணும்' என்றல்
273. திருக்கிளர் முகமும் வேர்வும் சிறந்தசெம் பவள வாயும்
மருக்கிளர் மாலை மார்பும் மகரகுண் டலமும் காதும்
சுருக்கிய மருங்கும் கண்டால் துடியிடை மடவார் ஆவி
இருக்கினும் இருக்கும் நில்லா திறக்கினும் இறக்கும் அன்றே.

     (இ - ள்.) திருக்கிளர் முகமும் வேர்வும் - அழகு விளங்குகின்ற
முகமும் அதில் துளிக்கின்ற வெயர்வைத் துளிகளும், சிறந்த செம்
பவளவாயும் - சிறப்பான பவளம் போன்ற சிவந்த வாயும், மருக்கிளர்
மாலை மார்பும் - மணம் வீசுகின்ற மாலையணிந்த மார்பும், மகர
குண்டலமும் காதும் - மகரமீன் வடிவமான குண்டலங்கள் அணிந்த
காதுகளும், சுருங்கிய மருங்கும் - ஒடுங்கிய இடையையும், கண்டால் -
பார்த்தால், துடி இடை மடவார் ஆவி - உடுக்கைபோலும் இடையுடைய
பெண்களின் உயிர், இருக்கினும் இருக்கும் நில்லாது இறக்கினும் இறக்கும்
- உடம்பில் காதல் நோயுடன் இருந்தாலும் இருக்கும் அல்லது
அந்நோயால் இறந்தாலும் இறக்கும்.

     கண்டாருயிருண்ணும் தோற்றமுடையன அம் மன்னனுடைய
உறுப்புகள் யாவும் என்று கூறியது இது. இருக்கினும் இறக்கினும்
உம்மைகள் ஐயப்பொருளன; ஏனைய உம்மைகள் எண்ணும்மைகள்.
பவளவாய், துடி இடை, உவமைத்தொகைகள்; அன்று, ஏ : அசைகள்.
                                                   (169)

 
  'அரிச்சந்திரன் கந்தனிலும் சுந்தரமுடையான்' என்றல்
274. நிரந்தர உரோம ரேகை நீலமும் வயிறும் மார்பும்
புரந்தர சாப மொத்த புருவமும் நுதலும் பட்ட
மரந்தழைத் திடந கைக்கு முறுவலும் மாயன் றன்பாற்
கரந்தஆர் அமுதச் சொல்லும் கந்தற்கு மில்லை மன்னோ.

     (இ - ள்.) வயிறும் மார்பும் நிரந்தர உரோம ரேகை நீலமும்
-வயிற்றிலும் மார்பிலும் உள்ள மயிரொழுங்கின் கறுப்பும், புரந்தர சாபம்
ஒத்த புருவமும் - இந்திரவில் போன்ற புருவமும், நுதலும் - நெற்றியும்,
பட்ட மரம் தழைத்திட நகைக்கும் முறுவலும் - பட்ட மரமும்
தளிர்க்கும்படி சிரிக்கும் ஒளிபொருந்திய புன்சிரிப்பும், மாயன் தன்பால்
கரந்த ஆர் அமுதச் சொல்லும் - திருமாலிடத்தில் வந்து ஒளித்த
அருமையான தேவ அமுதம்போன்ற சொற்களும், கந்தற்கும் இல்லை -
முருகனுக்கும் இல்லையாம்.

     புரந்தரன் - விண்ணுலக வேந்தன்.
                                                   (170)

 
     'மன்னவர் யாரினும் வனப்பிற் சிறந்தோன்' எனல்
275. இதையம்ஊ டுருக்கும் இன்பத் திறைவனை உற்று நோக்கித்
ததையும்மா மலர்த்தார் வேந்தர் தங்களைச் சூழ நோக்கிற்
புதைஇருள் கடிந்து வேலைப் புவியினை விளக்கும் சோதி
யுதனைக் கண்ட கண்டகட் குடுக்களைக் கண்ட தாமே.