பக்கம் எண் :


143

           சந்திரமதி காமநோய் மிகுதி
277. வாசமென் கலவைச் சேறு நானமும் புழுகும் வாரிப்
பூசவும் மேனி எங்கும் பொருக்கெழ வியன்சாந் தாற்றி
வீசவும் மேன்மேற் காம வெந்தழன் மண்டப் பின்னும்
ஆசையங் கடலுட் டாழ்ந்தா ளருக்கனும் கடலுட் டாழ்ந்தான்.

     (இ - ள்.) வாச மென் கலவைச் சேறும் - மணம் பொருந்திய
மென்மையான சந்தனக் குழம்பும், நானமும் புழுகும் வாரிப் பூசவும் - கத்தூரியும் புனுகும் அள்ளி அள்ளிப் பூசியும், மேனி எங்கும் பொருக்கு
எழு - உடம்பெல்லாம் காதல் வெப்பத்தால் கருகிப் பொருக்குண்டாகவும்,
வியன் சாந்து ஆற்றி வீசவும் மேன்மேல் காம வெந்தழல் மண்ட - பெரிய
விசிறி கொண்டு மிகுதியாக வீசியுங்கூட மேலும் மேலும் காமவெப்புத் தீ
மூள, பின்னும் ஆசை அம் கடலுள் தாழ்ந்தாள் - மேலும் ஆசைக்கடலுள்
அழுந்தினாள், அருக்கனும் கடலுள் தாழ்ந்தான் - சூரியனும்
மேலைக்கடலுள் மறைந்தான்.

     இரவு வந்தது என்பதாம். காதல் கொண்டவர்களுக்குச் சந்தனக்
குழம்பு முதலிய குளிர் பொருள்களெல்லாம் வெப்பமாய்த் தோன்றும்.
இதனை,

     "முத்துங் களபமுந் தண்பனி நீரு முயங்குமலர்த்
     தொத்துங் குளிரியுந் தூய்மலர்ப் பாயலுஞ் சூழ்ந்துபுறங்
     கத்துங் கடலும் கதலியு மாலியுங் கங்குலுமிப்
     பத்தும் பெரும்பகை யாய்விட்ட வாமொரு பைந்தொடிக்கே"

என்னுஞ் செய்யுளால் அறிக.
                                                   (173)

 
        பகல் நீங்குதலும் இரவு வருதலும்   
278. அறநெடும் செங்கோல் வேந்தர் ஆண்டபார் பிறர்க் கிரங்கா
மறநெடும் கொடுங்கோல் வேந்தர்க் களித்தவர் வனம்புக்
   
   
                                 காற்போற்
புறநெடும் கிரிசூழ் வேலைப் புவிஎலாம் கொடிய நீல
நிறநெடும் கங்குற் காக்கி நெடும்பக னீங்கிற் றன்றே.

     (இ - ள்.) அற நெடும் செங்கோல் வேந்தர் ஆண்ட பார் - அற
நெறி நிற்கும் நீண்ட செங்கோல் மன்னர் அரசாண்ட உலகினை, பிறர்க்கு
இரங்கா மற நெடுங் கொடுங்கோல் வேந்தர்க்கு அளித்து. அவர் வனம்
புக்கார் போல் - மற்றவர்க்கு இரங்காத அநீதி முறையில் ஆள்கின்ற
கொடுங்கோல் அரசர்க்குக் கொடுத்து அவர் காடு சென்றாற் போல, புற
நெடும் கிரிசூழ் வேலைப் புவி எலாம் கொடிய நீல நிற நெடும் கங்குற்கு
ஆக்கி நெடும் பகல் நீங்கிற்று - வெளிப்பக்கமாகச் சக்கரவாள மலைகள்
சூழ்ந்துள்ள கடலால் சூழப்பட்ட உலகினை எல்லாம் கொடுமையான இருள்
மிகுந்த இரவிற்குக் கொடுத்துவிட்டுப் பெரும்பகற் பொழுது நீங்கினது.

     இரங்கா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; பார் : இரண்ட
னுருபுதொக்கது; இச்செய்யுள் உவமை யணி; எலாம் : தொகுத்தல் விகாரம்.