பக்கம் எண் :


144

இரவு சந்திரமதிக்குக் காமநோயை மிகுவிக்கும் என்பது குறிப்பெச்சம்.
செங்கோல் மன்னன் ஆண்ட நாட்டினைக் கொடுங் கோல் மன்னனுக்கு
ஆளக் கொடுத்ததுபோலச் செங்கதிர் மறைந்து கங்குலுக்கு உலகினைக்
கொடுத்தது என்க. இது உவமையணி.
                                                   (174)

 
          செவ்வானத் தோற்றம்
279. மஞ்சடை வான மீறாய் மண்முத லாய பூதம்
அஞ்சடை யப்பே ரூழி அகண்டபூ ரணமாய் நின்ற
நஞ்சடை கண்டத் தண்ணல் நாடக நடித்த ஞான்று
செஞ்சடை விரிந்த தென்னச் செறிந்தது செக்கர் வானம்.

     (இ - ள்.) மஞ்சு அடை வானம் ஈறாய் மண் முதலாய பூதம்
அஞ்சு அடைய - மேகங்கள் பொருந்திய வானம் முடிவாயுள்ள மண்
முதலிய ஐம்பூதங்கள் முற்றிலும், அகண்ட பூரணமாய் நின்ற நஞ்சு அடை
கண்டத்து அண்ணல் - அளவற்ற நிறைவாய் நின்ற நஞ்சு பொருந்திய
திருநீலகண்டத்தையுடைய சிவபெருமான், பேர் ஊழி - பெரிய
ஊழிக்காலத்து உலகம் முடிவில், நாடகம் நடித்த ஞான்று செஞ்சடை
விரிந்தது என்ன - நாடகம் ஆடியபொழுது செந்நிறமான சடை விரிந்தது
போல, செக்கர் வானம் செறிந்தது - சிவந்த வானம் எங்கும் பரவியது.

     இச்செய்யுள் உவமை யணி. சிவபெருமான் யுகமுடிவில் நடனம்
ஆடும்போது அவன் செஞ்சடை விரிந்த தோற்றம்போல இருள்பரந்த
வுலகிற் செவ்வானம் படர்ந்து தோன்றிற்று என்று கூறியதால்.
                                                   (175)

 
             மாலைக் காலம்
280.

நாட்படத் தருமச் செங்கோல் நடத்திய வேந்தர் நாட்போய்த்
தோட்படுத் தவர்தம் மக்கள் சுடர்முடி சூடு முன்னர்
கோட்படை இழைத் திருந்த குறுநில வேந்த ருயக்கும்
வாட்படை புகுந்த தென்ன வந்தது மருள்கூர் மாலை.

     (இ - ள்.) நாள் படத் தருமச் செங்கோல் நடத்திய வேந்தர் நாள்
போய் - நீண்டகாலமாக முறைபிறழாது செங்கோல் செலுத்திய
அரசர்களுடைய காலம் முடிய, தோள் படுத்தவர் தம் மக்கள் - அரச
பாரஞ் சுமந்தவர்களுடைய பிள்ளைகள், சுடர் முடி சூடு முன்னர் -
ஒளிபொருந்திய மகுடஞ் சூடுவதற்குமுன், கோள் படை இழைத் திருந்த -
வலிமை மிக்க படை சேர்த்திருந்த, குறுநில வேந்தர் உய்க்கும் வாள் படை
புகுந்தது என்ன - சிற்றரசர் செலுத்தும் வாளேந்திய சேனை புகுந்ததுபோல,
மருள்கூர் மாலை வந்தது - மயக்கம் மிகுந்த மாலைக்காலம் வந்தது.

     பகலின் ஆட்சி நீங்கி இரவின் ஆட்சி வருவதற்குள் மயக்கஞ்
செய்கின்ற மாலை இடையிட்டது என்பதாம். பகலில் சூரியன் ஒளியால்
கண் விளங்கும். இரவில் நிலவொளி விளக்கொளியால் கண் விளங்கும்.
மாலையில் ஒருவகையான விளக்கமும் இன்றிக் கண் மயங்குவதுபோலக்
குறுநிலமன்னர்