பக்கம் எண் :


145

ஆட்சியில் மக்கள் செய்வதறியாது மயங்குவர் என்பது. குறுநிலவேந்தர்
வாட்படை புகுந்த தென்ன மருள்கூர் மாலை வந்தது என மாற்றுக. இஃது
உவமை யணி.
                                                   (176)

 
         இருளின் தோற்றம்
281. மறைந்தது பரிதி மேன்மேல் வளர்ந்தது கங்குற் காலம்
மறைந்தது வாடை வானத் தரும்பின வனந்த மீன்கள்
குறைந்தது கொடிய மாலை கூரிருட் பிழம்பு துன்றி
நிறைந்தது நீல வேலை நிலமெலாங் கவர்ந்த தென்ன.

     (இ - ள்.) பரிதி மறைந்தது - சூரியன் அடைந்தது, கங்குல் காலம்
மேல் மேல் வளர்ந்தது - இராக்காலம் மேலும் மேலும் அதிகரித்தது,
வாடை அறைந்தது - வாடைக்காற்று மோதியது, அனந்த மீன்கள் வானத்து
அரும்பின - எண்ணிறந்த நட்சத்திரங்கள் ஆகாயத்தில் தோன்றின,
கொடிய மாலை குறைந்தது - கொடுமையான மாலைக் காலங் குறைந்தது,
நீல வேலை நிலம் எலாம் கவர்ந்தது என்ன - கருங் கடலானது உலகம்
முழுதும் கவர்ந்ததுபோல, கூர் இருள் பிழம்பு துன்றி நிறைந்தது - மிகத்
திணிந்த இருள் தொகுதி செறிந்து நிறைந்தது.

     கடலாற் கொள்ளப்பட்ட உலகம்போல இருளால் கவரப்பட்டது
என்பதாம். இதுவும் உவமை யணி. நீல வேலை . . . . . . . கவர்ந்தது
என்ன கூரிருட் பிழம்பு துன்றி நிறைந்தது என மாற்றிக் கொள்க.
இல்பொருளுவமை யணி. நீல வேலை நிலமெலாங் கவர்தல் இல் பொருள்.
                                                   (177)

 
          இருளின் வருணனை
282. அருகிய மருங்குற் பேதை அழன்றெழு காமத் தீயால்
உருகிய உள்ளந் தாவி உலகெலாம் மேவிக் காய்ந்து
கருகிய தென்னத் தேவர் கடைந்தநா ளெழுந்த வாலம்
பெருகிய தின்றும் என்னப் பிறங்கிருள் செறிந்த தன்றே.

     (இ - ள்.) அருகிய மருங்குல் பேதை - சுருங்கிய இடையை
யுடைய சந்திரமதி, அழன்று எழு காமத் தீயால் - கொதித்து எழுகின்ற
காமத்தீயினால், உருகிய உள்ளம் தாவி உலகு எல்லாம் மேவி காய்ந்து
கருகியது என்ன - உருகிய மனமானது உடம்பைக் கடந்து உலகு எங்கும்
பரவி எரித்தலால் கருகியது போலவும், தேவர் கடைந்த நாள் எழுந்த
ஆலம் இன்றும் பெருகியது என்ன - தேவர்கள் பாற் கடலைக்
கடைந்தபொழுது எழுந்த ஆலகாலவிடம் இன்றைக்கும் பொங்கி எழுந்து
பெருகியது போலவும், பிறங்கு இருள் செறிந்தது - விளங்குகின்ற இருள்
நிறைந்தது.

     அன்று, ஏ : அசைகள்; மருங்குல் பேதை : இரண்டனுருபும் பயனும்
உடன்தொக்கதொகை. காய்ந்து என்னும் வினையெச்சம் கருகியது என்ற
பிறவினைகொண்டு முடிந்தது.