பக்கம் எண் :


147

     இச்செய்யுள் தற்குறிப்பேற்றவணி. திரளை - ஐ : சாரியை; அன்று,
ஏ : அசைகள்.

     திருமால் கடல் கடைந்த காலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள்
யாவருக்கும் பயனில்லாத அமுதத்தினை யளித்து, மிக்க சுவையுடைய
அமுதத் திரளினைக் கடலினுள் ஒளித்து வைத்திருந்தான் எனவும், அது
இப்போது வெளிப்பட்டதுபோலச் சந்திரன் வெளிப்பட்டான் எனவும்
ஆய்ந்து கொள்க. இயற்கையாக எழுந்த சந்திரனை அமுதத் திரளை எனக்
கற்பித்துக் கூறுவதால் தற்குறிப்பேற்றம் என்று கண்டு கொள்க.
                                                   (180)

 
          காமன் பவனி வரல்
285. திங்கள்வெண் குடைக்கீழ்த் தென்றற் றேர்மிசை ஏறி வாரி
மங்கல முரசம் ஆர்ப்ப மகரகே தனநின் றோங்கக்
கங்குல்வெங் களிறு சூழக் கடுங்கிளிப் புரவி தூண்டி
அங்கண்மா ஞால மெல்லாம் அனங்கவேள் பவனி வந்தான்.

     (இ - ள்.) அனங்க வேள் - மன்மதன், திங்கள் வெண் குடைக்
கீழ் தென்றல் தேர்மிசை ஏறி - சந்திரனாகிய வெண்கொற்றக் குடைக்
கீழ்த் தென்றலாகிய தேரில் ஏறி, வாரி மங்கல முரசம் ஆர்ப்ப - கடல்
அலையொலியாகிய முரசு ஒலிக்க, மகர கேதனம் நின்று ஓங்க - மீனக்
கொடியானது நிலைகொண்டு உயர்ந்து நிற்க, கங்குல் வெங் களிறு சூழ -
இரவாகிய கொடுமையான யானை சூழந்து வர, கடுங் கிளிப் புரவி தூண்டி
- கடுமையான கிளியாகிய குதிரையைச் செலுத்தி, அம் கண் மா ஞாலம்
எல்லாம் பவனி வந்தான் - அழகிய இடம் அகன்ற பெரிய உலகமுழுதும்
உலா வந்தான்.

     மா ஞாலம் : உரிச்சொற்றொடர். மக்களுக்குக் காதல் நோயை
மிகுவிக்கும் இப்பொருள்களை உலாப் பொருள்களாகக்கொண்டு மன் மதன்
உலா வருகிறான். காமனுக்குத் திங்கள் குடை தென்றல் தேர், கடல் முரசு,
மீன்கொடி, இருள் யானை, கிளி குதிரை என்று அறிந்து கொள்க. காமன்
ஒரு மன்னன் எனவும், அவன் உலா வந்தான் எனவும் கூறினர்.
அரசர்க்குரிய குடை கொடி முதலியவைகள் அவனுக்கும் உண்டு என்று
கூறுவது இலக்கிய மரபு.

     "தொடையிலஞ்சி மஞ்சளிளஞ் சோலைபடை வீடு
     படைமங் கையர்கமுகம் பாளை - யிடுகவரி
     காளாஞ்சி மல்லிகையாங் காரிகையீர் மாரனுக்கு
     வாளாமோ லைப்பூவு மால்"

     "ஆலைக் கரும்புசிலை யைங்கணைபூ நாண்சுரும்பு
     மாலைக் கிளிபுரவி மாருதந்தேர் - வேலை
     கடிமுரசங் கங்குல் களிறுகுயில் கானம்
     கொடிமகரந் திங்கள் குடை"

எனக் கூறியிருப்பது காண்க.
                                                    (181)