|
| 292. |
உன்னைக்
காய்ந்த பணிக்குற வென்றுகொல்
என்னைக் காய்ந்தனை ஏந்திளந் திங்களே
முன்னைக் காய்ந்திலை என்உயிர் முற்றிய
பின்னைக் காய்ந்து பிழைப்பிக்க வல்லையோ. |
(இ
- ள்.) ஏந்து இளம் திங்களே - இளமைபொருந்திய சந்திரனே!
உன்னைக் காய்ந்த பணிக்கு உறவு என்றுகொல் - உன்னைச் சீறி
விழுங்கிய பாம்புக்கு உறவென்றா, இப்படி என்னை எரிக்கின்றாய் -
இவ்வாறு என்னைச் சுடுகின்றாய்? முன்னைக் காய்ந்திலை - முன்னமேயே
எரித்தாயில்லை, என் உயிர் முற்றிய பின்னைக் காய்ந்து - எனது உயிர்
போனபிறகு எரித்து, பிழைப்பிக்க வல்லையோ - எனது உயிர் முடிந்த
பிறகு குளிர்ந்த நிலாக் கதிர் கொண்டு நீ என்னைப் பிழைப்பிக்க
முடியுமோ ?
'என்
அல்குல்' பாம்பின் படம் போன்று இருத்தலால் பாம்புக்கு
உறவென்று 'கருதினையோ' என்ற கருத்தினால் 'பணிக்குற வென்று கொல்'
என்றாள். காய்ந்திலை : எதிர்மறை முன்னிலை ஒருமை வினை முற்று.
பணத்தையுடையது பணி : காரணப்பெயர். இளமை ஏந்து திங்கள் -
ஏந்திளந் திங்கள். முன்னை, பின்னை; ஐகாரம் சாரியை. சந்திரனைக்
காய்ந்த பணி - இராகு.
(188)
| |
சந்திரமதி
இரவை இகழ்தல் |
| 293. |
அருத்தி
யோடுதம் மென்முலை அன்பர்தோள்
பொருத்தி ஓகைகொண் டாடுவர் பூவைமார்
வருத்தி ஓய்வுற வாட்டினை என்னையான்
ஒருத் தியோஉனக் குட்பகை கங்குலே. |
(இ - ள்.)
கங்குலே - இராப் பொழுதே ! பூவைமார் - உலகப்
பெண்கள், அருத்தியோடு - ஆசையோடு, தம் மென் முலை அன்பர்
தோள் பொருத்தி - தம்முடைய மென்மையான முலைகளைத் தங்கள்
அன்புடைய கணவர் தோளோடு பொருந்தப் புல்லி, ஒகை கொண்டாடுவர்
- இன்பம் அனுபவிப்பர், என்னை வருத்தி ஒய்வுற வாட்டினை - என்னை
மட்டும் வருத்தப்படுத்தி நான் ஓய்ந்துபோம்படி துன்புறுத்தினை, யான்
ஒருத்தியோ உனக்கு உட்பகை - உனக்கு உட்பகை நான் ஒருத்திமட்டும்
தானோ- கூறுக.
ஓகாரம் : வினாப்பொருளில் வந்தது. 'இரவே !
மங்கையர் பலரும்
இன்பம் துய்த்திருக்க என்னைமட்டும் துன்பத்திற்காளாக்கினையே !
உனக்கு நான் பகையா? என்று புலம்பினாள்.
(189)
| |
நிலவை
வெறுத்தல் |
| 294. |
வெங்கை
ஆதபன் வீழ்தலும யான்உனைச்
செங்கை கூப்பிய தீவினை நோக்கியோ
அங்கை யாலெடுத் தாரழற் கொள்ளிஎன்
கொங்கை மீது கொளுத்தினை திங்களே. |
|