பக்கம் எண் :


154

     ஊழி சென்ற - ஊழி : பால்பகா அஃறிணைப்பெயர் : பன்மையை
யுணர்த்தியது. சென்ற : பலவின்பால் வினைமுற்று. பொற் பாவை :
அடையடுத்த ஆகுபெயர். ஒண் நுதல் : அன்மொழித்தொகை. பகலோன்
மறைந்தபின் எத்தனை யுகம் கழிந்தன என்று தோழியை வினவினள்
சந்திரமதி. எனவே, இரவு காதல் நோயுற்றவர்க்குப் பல ஊழிக்காலம்
போலத் தோன்றும் என்பது.

     "ஊழி பலவோ ரிரவாயிற்றோ வென்னும்
     கோழி குரலடைத்ததோ வென்னும்"

என்ற கவியும் இக்கருத்தை யொட்டியதே.
                                                   (194)

 
         கோழி கூவுதல்
299. தோழி கைத்தலம் கூப்பிஇத் துன்னிருள்
நாழி கைக்கிட மேநலம் கேள்என
வாழி கைப்பிடி வந்தும்என் னாஎனாக்
கோழி கைத்தலத் தைக்கொட்டிக் கூவிற்றே.

     (இ - ள்.) தோழி கைத்தலம் கூப்பி - தோழி கைகுவித்து
வணங்கி, இத் துன்னிருள் நாழிகைக்கு இடமே - இந்த நெருங்கிய
இருட்டானது இன்னும் ஒரு நாழிகை நேரமே இவ்விடம் நிலை பெறும்;
நலம் கேள் என - அதற்குமேல் நன்மையைக் கேட்பாயாக என்று
சொல்ல, கோழி - அச்சமயம் கோழியானது, கைத்தலத்தைக் கொட்டி
- தன் இறகுகளாகிய கைகளை யடித்துக்கொண்டு, வாழி - அரிச்சந்திரனே
நீ வாழ்க, வந்து கைப்பிடி - நீ வந்து இவள் கைகளைப் பிடித்துத்
திருமணஞ்செய், என்னா எனா என்று கூவிற்று - என்று என்று கூவி
(அரிச்சந்திரனை) அழைத்தது.

     கைத்தலம் : இருபெயரொட்டுப் பண்புத்தொகை; துன் இருள் :
வினைத்தொகை; பிடி : முதனிலைத் தொழிற்பெயர்; வாழி : வியங்கோள்
வினைமுற்று. எனா : தொகுத்தல்; என்னா எனா : அடுக்குப் பன்மைபற்றி
வந்தது.
                                                   (195)

 
       பொழுது புலர்தல்
300.

வேய டங்கின வேலை அடங்கின
தீய டங்கின திங்களும் கங்குலும்
போய டங்கின மன்மதன் பேர்எலாம்
வாய டங்கின வண்குமு மங்களே.

     (இ - ள்.) வேய் அடங்கின - வேய்ங்குழலோசைகள் அடங்கின,
வேலை அடங்கின - கடலொளிகள் அடங்கின, திங்களும் கங்குலும் தீ
அடங்கின - சந்திரனும் அரவும் வெம்மை நீங்கின, மன்மதன் பேர்
எலாம் போய் அடங்கின - மன்மதனுடைய காமமயக்கம் என்ற
பெயரெல்லாம் போய் அடங்கின, வண் குமுதங்கள் வாய் அடங்கின -
அழகிய குமுதங்கள் குவிந்தன.