பக்கம் எண் :


156

பூமாலை போல்பவள் எனக் கொளின் உவமையாகுபெயர்; பூமாலை
அணிந்தவள் எனவும் பொருள் கொள்ளலாம். சந்திரனை இனிமேல் நான்
செய்வதைக் காட்டுவேன் என்று விரைவாக வருவான் போல வந்தான்
சூரியன் என்று கூறயது. இனி நான் அவனை ஒன்றுஞ் செய்யவிடேன்;
ஒளிமழுங்கி ஓடும்படி செய்வேன் பாருங்கள் என்று காட்டுவதுபோல
இருந்தது அவன் தோற்றம் எனக் கொள்க.
                                                   (198)

 
    புள்ளொலி சங்கொலி முதலியன
303. சோலை எங்கும் தொழுதிகள் ஆர்த்தன
ஆலை யம்தொறும் சங்கங்கள் ஆர்த்தன
மாலை வெண்குடை மன்னவர் முன்றில்வாய்க்
காலை மாமுர சங்கள் கறங்கின.

     (இ - ள்.) சோலை எங்கும் - சோலைகளில் எல்லாம், தொழுதிகள்
ஆர்த்தன - பறவைக்கூட்டங்கள் ஒலித்தன, ஆலையம் தொறும் -
கோயில்களிலெல்லாம் சங்கங்கள் ஆர்த்தன - சங்கொலிகள் முழங்கின.
மாலை - மாலைகளையும், வெண்குடை - வெண்கொற்றக் குடைகளையு
முடைய, மன்னவர் முன்றில் வாய் - அரசர்களின் அரண்மனை
முற்றங்களில், காலை மா முரசங்கள் கறங்கின - விடியற்காலத்தில்
முழங்குகிற பெருமுரசங்கள் முழங்கின.

     முன்றில் : இலக்கணப்போலி. தொழுதி - பறவைக்கூட்டம்.
பலவகைப் பறவைகள் ஒலியும், சங்கொலியும், காலை முரசமும் ஒலித்தன
எனக் காண்க.
                                                   (199)

 
  மணிமண்டபத்திற்கு மன்னவர் முதலியவர் வருதல்
304. முன்னம் மன்னன் முகுர்த்தம்ஓர் ஏழெனச்
சொன்ன நல்தினம் வந்துதொ டங்கலும்
மன்ன னும்மறை யோர்களும் மாதரும்
கன்ன லந்திருக் காவணத் தெய்தினார்.

     (இ - ள்.) முன்னம் மன்னன் முகுர்த்தம் ஓர் ஏழெனச் சொன்ன
நல் தினம் - முன்னே சந்திரதய அரசன் முகூர்த்தம் ஓரேழு நாளில்
நிகழும் என்று சொன்ன நன்னாள், வந்து தொடங்கலும் - வந்து
தொடங்கியவுடன், மன்னனும் மறையோர்களும் மாதரும் - சந்திரதய
அரசனும் அந்தணர்களும் பெண்களும், கன்னல் அம் காவணத்து
எய்தினர் - கரும்பு முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்ட திருமணப்
பந்தலில் வந்து சேர்ந்தார்கள்.

     முகூர்த்தம் என்பது 'நன்றென்றேன்றியேன்' என்பதுபோற் குறுகியது.
இது குறுக்கல் விகாரம்.
                                                   (200)

 
  திருமணப் பந்தலில் வந்து கூடியவர்கள்   
305. வேந்தர் ஈண்டினர் வேதியர் ஈண்டினர்
மாந்தர் ஈண்டினர் மங்கையர் ஈண்டினர்