பக்கம் எண் :


158

தனங்களாகிய இரண்டு மலைகளைச் சுமந்துகொண்டு, எழில் மங்கை
மாளிகை வாயிலின் மேயினாள் - அழகிய சந்திரமதி மாளிகை வாயிலை
அடைந்தாள்.

     கயல் கண் : உவமத்தொகை; வாயில் : இலக்கணப்போலி; இரு
குன்று : பண்புத்தொகை; கொங்கை என்ற இரு குன்று என்றது உருவகம்.
                                                   (203)

 
  மெல்ல நடக்கவேண்டுமென்று சிலம்பு புலம்பல்   
308. வல்எ னப்புடைக் குந்தன வன்பொறைக்
கில்எ னக்கரு தும்மருங் கிற்றிடும்
மெல்எ னப்பதம் வைத்து மிதித்துமுன்
செல்எ னப்பொற் சிலம்பு புலம்பும்ஆல்.

     (இ - ள்.) வல் எனப் புடைக்குந் தன வன் பொறைக்கு - சூதாடு
கருவிபோல விம்மி எழும் தனங்களின் வலிய பாரத்தைப் பொறுத்
திருப்பதனால், இல் எனக் கருதும் மருங்கு இற்றிடும் - இருக்கிறதோ
இல்லையோ என்று ஐயுற்றுக் கருதப்படுகிற இடை ஒடிந்துவிடும்
(ஆகையால்), மெல்லெனப் பதம் வைத்து மிதித்து முன் செல் என -
மென்மையாக அடிகளை வைத்துப் பைய மிதித்து முன்னே செல்வாய்
என்று, பொற் சிலம்பு புலம்பும் - பொன்னம் சிலம்புகள் இரங்கி ஒலிக்கும்.

     'வல் என' என்பதில், என உவமையுருபு. 'மெல் என' - இதில் என
குறிப்பிடைச்சொல். 'இல் என', 'செல் என' இவற்றில் என என்பது
வினையைச் சார்ந்து வந்தது. ஆல் : அசை. வன் பொறை :
பண்புத்தொகை.
                                                   (204)

     கூந்தல் ஆற்று நீரையும், கொண்டை நீர்ச்சுழியையும், அணிகள்
    
     அனந்தகோடி ஆதவன் ஒளியையும் போன்றன
 

 
309.

நீடி வார்ந்து நெறித்த குழல்சிகை
ஓடி உள்சுழி யும்புனல் ஒத்ததால்
ஆடி நோக்கி அணிந்த அணிச்சுடர்
கோடி சூரியர் கூடிய தொத்ததே.

     (இ - ள்.) நீடி வார்ந்து நெறித்த குழல் சிகை - நீளமான
சிக்கெடுக்கப்பெற்று வகிர்ந்த கூந்தற்கொண்டை, ஒடி உள் சுழியும் புனல்
ஒத்தது - ஒடி உள்ளே சுழியையுடைய ஆற்று நீர்போன்றது, ஆடி
நோக்கி அணிந்த அணிச் சுடர் - கண்ணாடி பார்த்து அதில்
அணியப்பெற்ற அணிகலன்களின் ஒளி, கோடி சூரியர் கூடியது ஒத்தது -
கோடிக்கணக்கான சூரியர்கள் ஓரிடத்திலே கூடியிருந்ததை ஒத்திருந்தது.

     கூந்தலின் நீளத்திற்கு ஆற்று நீரோட்டமும், கொண்டைக்கு அதன்
சுழியும் உவமையாயின. அணியின் ஒளிக்கு ஆதித்தன் ஒளி
உவமையாயிற்று. இஃது உவமையணி. ஆல் : அசை.
                                                   (205)