பக்கம் எண் :


16

     (இ - ள்.) ஆரம், குளவஞ்சி, அசோகு, பலாசம், தேவதாரம், மகிழ்,
காடு, சண்பகம், சாதிலிங்கம், கோங்கு, சுரபுன்னை, கடம்பு, கச்சூரம்,
மூங்கில், கர்ப்பூரம், அரசு ஆகிய மரங்கள் கொம்புகளோடு (அலைகள்)
புரட்டி உருட்டிச் செல்ல, சரயுநதி வேகமாக ஓடியது. அன்று, ஏ :
அசைகள்.

     பெருவெள்ளம் மலையினின்று புறப்பட்டதால் அங்குள்ள மரங்களை
யெல்லாம் வேரொடு பறித்து உருட்டிக்கொண்டு போயிற்று என்பது. பல
மலைகளினின்று பெருகிவந்த வெள்ளமெல்லாம் சரயு என்ற ஆற்றில்
சேர்ந்து விரைந்து சென்றது எனக் கொள்க.
                                                          (8)

23.

ஏலம் தகரம் இலவங்கம் அரித்தி ரம்தக்
கோலம் வசவாசி செங்குங்குமம் கோட்டம் வாரித்
தாலம் பதினாலும் நடுங்கிடச் சார்ந்த ஊழிக்
காலம் தனில்மோது கருங்கடல் ஒத்த தம்மா.

     (இ - ள்.) ஏலம், தகரம், இலவங்கம், அரித்திரம், தக்கோலம்,
வசவாசி, செங்குங்குமம், கோட்டம் வாரி - ஏலம் முதலிய பொருள்களை
வாரிக்கொண்டு, தாலம் பதினாலும் நடுங்கிட - பதினான்கு உலகங்களும்
நடுங்கும்படி, சார்ந்த ஊழிக்காலம் தனில் மோது கருங்கடல் ஒத்தது -
வந்து பொருந்துகின்ற யுக முடிவு ஊழிக்காலத்தில் வந்து மோதுகின்ற
பெரிய கடல்போலச் சரயு வெள்ளம் பெருகியது.

     அம்மா : வியப்பு இடைச்சொல். ஏலம் தகர முதலிய வாசனைப்
பொருள்கள் தரும் மரங்கள் இவற்றையும் வாரியது. தாலம் - பூமி.
பதினான்கு ஆவன : மேலேழ் பூமி, கீழ் ஏழ் பூமி இருப்பதாக இலக்கியம்
கூறு முறை. சரயுநதி ஊழிக்காலத்து மேலெழுந்துவரும் கருங்கடல்போலத்
தோன்றியது என்பது.
                                                     (9)

24. நீலம் வைரம் வைடூரியம் நித்தி லம்செங்
கோலம் திகழ்துகிர் கோமளப் பத்ம ராகம்
தாலம் தனில்வந்ததொர் இந்திர சாபம் என்ன
ஓலம் திகழ்ஆற்றின் ஒழுக்கெறிந் தோடிற் றன்றே.

     (இ - ள்.) நீலம், வைரம், வைடூரியம், நித்திலம், செங்கோலம், திகழ்
துகிர், கோமளப்பத்மராகம் - நீலம், வைரம், வைடூரியம், முத்து,
செந்நிறமாக விளங்குகின்ற பவளம், அழகிய பதுமராகம் ஆகிய மணிகள்
ஆற்றுநீரில் விரவி உருண்டு ஒளி வீசி வருதலால், தாலம் தனில் வந்தது
ஓர் இந்திர சாபம் என்ன - வானத்திலிருந்து பூமியில் வந்துற்ற ஒப்பற்ற
இந்திர வில்லைப்போல, ஓலம் திகழ் ஆற்றின் ஒழுக்கு எறிந்து ஓடிற்று -
ஒலி மிகுந்து விளங்குகின்ற ஆற்றில் நீரோட்டம் கரைகளில் அலை
மோதிக்கொண்டு ஓடினது. ஒழுக்கு : முதனிலைதிரிந்த தொழிற்பெயர்; ஓடு :
பகுதி. இன் : இறந்தகால இடைநிலை. று : ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.
வான வில்லின் நிறம் நீலம், வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள், கறுப்பு
ஆகிய எழுவகை நிறங்களும் கலந்தது. ஆதலாற் பலவகைப் பட்ட நிறம்