பக்கம் எண் :


160

  'அரிச்சந்திரனே வருக; ஏனையோர் ஏகுக' எனக் கூறுதல்போல்
   
     அரை நூன்மாலை ஒலித்தது
  
312. காவென் றெண்ணும் கரத்தரிச் சந்திர
வாவென் றெண்ணரும் மன்னரை அப்புறம்
போவென் றெண்ணிப் புகல்கின்ற போலவே
தாவு சோதிக் கலாபந் தழங்கவே.

     (இ - ள்.) கா என்று எண்ணும் கரத்து அரிச்சந்திர வா என்று -
கற்பகத் தரு என்று கருதத்தகுந்த வண்மை பொருந்திய கைகளை யுடைய
அரிச்சந்திரனே வருவாயாக என்றும், எண் அரும் மன்னரை -
எண்ணிக்கையில்லாத ஏனைய அரசர்களெல்லாம், அப்புறம் போ என்று
எண்ணிப் புகல்கின்ற போல - அப்பாலே எட்டிப்போங்கள் என்று பின்
நடக்கவிருப்பதை ஆராய்ந்து கூறுவதுபோல, தாவு சோதிக் கலாபம் -
ஒளிவீசுகின்ற அரைநூன்மாலை, தழங்க - ஒலிக்கவும்;

     ஏகாரம் : முன்னையது தேற்றம், பின்னையது அசை. இச்
செய்யுளும் குளகம். கலாபம் ஒலிப்பது, வா என்றும் போ என்றும்
கூறுவது போல இருந்தது எனக் கற்பித்தார். இது தற்குறிப்பேற்றம், தழங்க
(காவணத்து) எய்தினாள் (210) என முடிவு செய்க.
                                                   (208)

313. கைத்த லத்துணை வீசிக் கதிர்மணிப்
பத்திபின் னும்முன் னும்சென்று பாயவே
எய்த்த நுண்இடை இற்றிடும் என்றுமேல்
மொய்த்த வண்டு கலைந்து முழங்கவே.

     (இ - ள்.) கைத்தலத் துணை வீசி - கைகள் இரண்டையும் வீசி,
கதிர் மணிப் பத்தி - ஒளியையுடைய இரத்தின வரிசைகள், பின்னும்
முன்னும் சென்று பாயவே . பின்புறமும் முன்புறமும் சென்று ஒளி வீசவும்.
எய்த்த நுண்ணிடை இற்றிடும் என்று - இளைத்த நுட்பமான இடை
ஒடிந்துவிடும் என்று, மேல் மொய்த்த வண்டு கலைந்து முழங்க - மேலே
மொய்த்த வண்டுகள் கலைந்து ஒலிக்கவும்;

     பாயவே : ஏகாரம் ஈற்றசை. இச்செய்யுள் குளகம்; நடந்தால் கூந்தற்
பாரத்தாலும் கொங்கைப் பாரத்தாலும் சிறிய இடை யொடிந்துவிடும் என்று
கூறுவதுபோல் கூந்தலின் மொய்த்த வண்டுகள் மேலெழுந்து முழங்க
என்றார். இயற்கையாக வண்டுகள் கலைந்தெழுவதை இடை யொடியும்
என்று கருதி எழுவதாகக் கூறுவதால் இது தற்குறிப்பேற்றம். முழங்க என்ற
எச்சமும் (காவணத்து) எய்தினாள் (210) என்பதைக் கொண்டு முடியும்.
                                                   (209)