பக்கம் எண் :


161

314. சென்னி நின்றிரு சீறடி மட்டும்வான்
மின்னி னால்அமைத் தன்னசெம் மேனியைப்
பொன்னி னான்மணி யால்புதைத் தேஎழில்
கன்னி தன்மணக் காவணத் தெய்தினாள்.

     (இ - ள்.) சென்னி நின்று இரு சீறடி மட்டும் - தலையிலிருந்து
இரண்டு பாதங்கள் வரை, வான் மின்னினால் அமைத்தன்ன செம்
மேனியை - வானத்திலுள்ள மின்னலினாலே அமைத்தாற் போன்ற செந்நிற
மேனியை, பொன்னினால் மணியால் பதைத்து - பொன்னாலும்
இரத்தினத்தாலும் பொதிந்து, எழில் கன்னி - அழகுமிக்க கன்னிப் பருவம்
வாய்ந்த சந்திரமதி, தன் மணக்காவணத்து எய்தினாள் - தனது
மனப்பந்தலுக்கு வந்தாள்.

     புதைத்தே : ஏகாரம் அசை. சீறடி - சிறுமை + அடி :
பண்புத்தொகை; வான்மின் : ஏழாம் வேற்றுமைத்தொகை. புதைத்து,
காவணத்து எய்தினாள் என்று கூட்டுக. மறிக்கவும் (207) தழங்கவும் (208)
முழங்கவும் (209) பதைத்து எய்தினாள் என்று கூட்டி முடிக்க,
பொன்னாலும் மணியாலும் செய்த அணிகள் உச்சியிலிருந்து உள்ளங்கால்
வரையுள்ள அழகை மறைத்தன என்பது குறிப்பு. எழிற் கன்னி என்று
கூறியது அதனை விளக்கியது.
                                                   (210)

 

     திருமணப் பெண் திருமணப்பந்த ரடைந்ததும் மன்னர் மகிழ்ச்சி

315. பெடை நடைத்திருப் பெண்ணர செய்திய
திடையின் நின்றவா ஏத்தி இயம்பிடக்
கடைஉ கத்தில் கடல்கிளர்ந் தால்என
அடைய மன்னவர் ஆலித் தெழுந்தனர்.

     (இ - ள்.) பெடை நடைத் திருப் பெண்ணரசு எய்தியது -
பெண்ணன்னம் போன்ற நடை வாய்ந்த அழகிய பெண்ணரசியாகிய
சந்திரமதி மணப்பந்தர் அடைந்ததை, இடையில் நின்றவர் ஏத்தி இயம்பிட
- அவை நடுவே நின்றவர் துதித்து மன்னவர்கட்குக் கூற (அதனைக்
கேட்டு), கடையுகத்தில் கடல் கிளர்ந்தால் என - யுகமுடிவிலே கடல்
வெள்ளம் பொங்கி யெழுந்ததுபோல, மன்னவர் அடைய ஆலித்து
எழுந்தனர் - அரசர் அனைவரும் ஆரவாரத்துடன் (சந்திர மதியைக்
காண்பதற்கு) இருக்கைவிட்டு எழுந்து நின்றனர்.

     அரசர் எழுந்த ஆரவாரம் கடையுகத்திற் கடல் பொங்கி மேல்
எழுந்த ஆரவாரம்போல இருந்தது என்பது. இஃது உவமையணி. நடை
என்று பின் வந்ததால் பெடை என்பது அன்னப்பேடையைக் குறிப்பால்
உணர்த்தியது.
                                                    (211)

 
316. தேரி னேறித் திசைஎங்க ணும்வரப்
போரின் வீரர்கள் பொம்மென் றதிர்ந்தெழும்
மூரி வீர முரசமும் காளமும்
பேரியும் சங்கும் பீலியும் ஆர்த்தவே.