பக்கம் எண் :


162

     (இ - ள்.) போரின் வீரர்கள் தேரின் ஏறித் திசை எங்கணும் வர
- போர்வீரர்கள் தேரில் ஏறி எல்லாத் திசைகளிலும் வர; பொம் என்று
அதிர்ந்து எழும் மூரி வீர முரசமும் காளமும் பேரியும் சங்கும் பீலியும்
- பொம்மென்ற ஒலி எழுப்பி அதிர்ச்சியோடு எழுகின்ற பெரிய வீரமுரசு,
காளம், பேரி, சங்கு, பீலி முதலியவை எல்லாம், ஆர்த்த - முழங்கின.

     ஏகாரம் : ஈற்றசை. பொம்மென் : ஒலிக்குறிப்புச்சொல். உம்மை
எண்ணும்மை. வீரர்கள் தேரேறிச் சென்று திசையெல்லாம் வென்று
வருவதற்காக முழங்கும் வீரமுரசு முதலியன முழங்கின சந்திரமதி
மணமண்டபத்துட் புகுந்தபோது.
                                                    (212)

 
317. தாளம் மத்தளம் தண்டிகை யாழ்தெரு
நீள மட்டும் நிறைந்தன சக்கர
வாள மட்டும் மலிந்தன தூளண்ட
கோள மட்டும் கொடித்திரள் உற்றவே.

     (இ - ள்.) தாளம் மத்தளம் தண்டிகை யாழ் - தாளங்கள்,
மத்தளங்கள், வீணைத் தண்டங்கள், யாழ் முதலியன, தெரு நீள மட்டும்
நிறைந்தன - தெருவின் நீளம் முழுதும் நிறைந்தன, தூள் - மக்கள்
நடப்பதனால் உண்டாகிய தூசி, சக்கரவாளம் மட்டும் மலிந்தன -
சக்கரவாளகிரி வரை நிறைந்தன, கொடித் திரள் - கொடிக்கூட்டங்கள்,
அண்ட கோள மட்டும் உற்ற - ஆகாய வட்டம் வரை பொருந்தின.

     ஏகாரம் : ஈற்றசை. சந்திரமதி மணமண்டபம் புகுந்தபோது
தெருவில் மத்தளம் முதலிய கருவிகள் நிறைந்தன; மக்கள் வந்து
நெருங்கினர்; தூசியெழுந்தது; கொடிகளும் நிறைந்தன என்க.
                                                   (213)

 
318. பாரி னின்று பரந்தெழுந் தண்டர்தம்
ஊரி னோடி உயர்ந்த பெருந்துகள்
காரி னுண்டுளிக் கண்மறைத் தெண்திசை
மூரி யானை மதத்துளை மூடிற்றே.

     (இ - ள்.) பாரின் நின்று பரந்து எழுந்து - பூமியிலிருந்து பரவிச்
சென்று மேலெழுந்து, அண்டர்தம் ஊரின் ஓடி உயர்ந்த - தேவர்களின்
ஊராகிய அமராவதி வரை விரைந்து போய் உயர்ந்த, பெருந் துகள் -
பெருந் தூசிகள், காரின் நுண் துளிக் கண் மறைத்து - மேகத்தின் சிறிய
மழைக்கண்களை மறைத்து, எண் திசை மூரி யானை - எட்டுத் திக்கிலும்
உள்ள பெரிய யானைகளின், மதத் துளை மூடிற்று - மத மொழுகும்
துளைகளையும் மூடிவிட்டது.

     ஏகாரம் : ஈற்றசை. பூமியினின்று பரந்தெழுந்த தூசியானது
மேகபடலத்தை மறைத்துத் திசையானைகளின் மதத்துளையையும்
மூடிவிட்டது.
                                                    (214)