பக்கம் எண் :


167

ஓடவும், ஒரு கோடி சின வாளை கரை யேறு - கோபங்கொண்ட ஒரு
கோடி வாளைமீன்கள் கரை யேறுகின்ற, குகுரேசனே - குகுரநாட்டு
அரசனாவான்.

   முலையாள் : விளிவேற்றுமை. பொரு கோடு : வினைத்தொகை. கோடி,
அளவிறந்தது என்ற பொருளைத் தந்தது. பல எருமைகள் குளத்து நீரில்
விழுந்தபோது கெண்டை மீன்களும் வண்டுகளும் வெள்ளையன்னங்களும்
விரைந்து வேறிடங்கட்குச் செல்லும் என்பதும் வாளை மீன்கள் துள்ளிக்
கரைக்கு வரும் என்பதும் கூறப்பட்டது. குகுரநாடு நீர்வளமிக்கது என்பது
இதனால் தோன்றிற்று.
                                                   (222)

     'இவன் மகத மன்னன்' எனல்
327. முயறாவி அணுகாது வியர்தாவும் மதிபோலும்
   முகமா தராய்
புயறாவு மயர்தேரி னிடைஏறி வருமாலை
   புனைமார் பினான்
கயறாவு நறுநீல முகைபீறி மடைஓடு
   கமழ்தே றல்போய்
வயறாழ வயல்ஊடு வளர்சாலி கதிர்தாழும்
   மகதே சனே.

     (இ - ள்.) முயல் தாவி அணுகாது - முயலானது தாவி அணுகாமல்,
வியர் தாவும் - முயலுக்குப் பதிலாக வியர்வை தாவுகின்ற, மதி போலும்
முக மாதராய் - சந்திரன்போன்ற முகத்தையுடைய பெண்ணே, புயல் தாவும்
உயர் தேரினிடை ஏறி வரும் மாலை புனை மார்பினான் - மேகமண்டலம்
வரை உயர்ந்திருக்கின்ற உயர்ந்த தேரில் ஏறி வருகின்ற மாலை யணிந்த
மார்பினையுடையவனாகிய இவன், கயல் தாவு நறு நீல முகை பீறி -
மீன்கள் தாவுவதால் மணம்பொருந்திய குவளை யரும்பு கிழிந்து,
மடையோடு போய் - மடைகளில் ஓடிச் சென்று, கமழ் தேறல் - மணம்
கமழ்கின்ற தேனானது, வயல் போய் தாழ - வயல்களிற் பாய, வயலூடு
வளர் சாலி - வயலில் வளர்கின்ற நெற்பயிர்கள், கதிர் தாழும் - கதிர்
விளைந்து தாழ்ந்துநிற்கும் வளம் பொருந்திய, மக தேசனே - மகதநாட்டு
மன்னன்.

     ஏகாரம் : தேற்றம்; சந்திரமதியின் முகத்தைச் சந்திரனுக்கு
ஒப்பிட்டுப் பின் அம்புலி முகத்தில் முயல் தாவும் ஆனால் சந்திரமதி
முகத்தில் வியர் தாவும் என வேற்றுமை கூறலின் வேற்றுமை யணி.
மீன்கள் துள்ளுவதால் நீலமலரும் கிழிந்து தேன் வழிந்து மடைவழி போய்
வயலிற் பாய்ந்து நெற்கதிர்களை விளைக்கும் வளமுடையது மகத நாடு
எனக் கொள்க.
                                                   (223)

 
    சந்திரமதிக்குக் கவுடமன்னனைக் காட்டல்
328. முளைஏறு வண்கிரண இருதோண றுங்குதலை
   மொழிமா தராய்
உளைஏறு திண்புரவி கரிசூழ இங்குவரும்
   உயர்தே ரினான்