|
ஏகாரம் : தேற்றம். சிந்து, கடல்,
குறள், பொரி :
உவமையாகுபெயர்கள். சிந்து என்ற சொல்லும் பொருளும் இக் கவியிற்
பல இடங்களிலும் வந்திருப்பதால் இது சொற்பொருட்
பின்வருநிலையணியாம்.
(225)
| |
சந்திரமதிக்கு
அங்கநாட்டரசனைக் காட்டல் |
| 330. |
சுரரங்கம்
மிகநொந்து கடைகின்ற தினம்வந்த
சுதைஎன் சொலாய்
நரரங்க மலைகொண்டு சதுரங்க விரிசிந்து
நடும் இந்தமால்
பரரங்க மிகஎன்று வினைகொண்டு சிலைகொண்டு
படைவந் தநாள்
வரரங்க தரர்கொன்ற மதனங்கம் உகும்அங்க
வளநா டனே. |
(இ - ள்.)
சுரர் அங்கம் மிக நொந்து கடைகின்ற தினம் வந்த
சுதை என் சொலாய் - தேவர்கள் உடல் மிக மெலிந்து அமுதம் பெற
எண்ணித் திருப்பாற்கடலைக் கடைகின்ற நாளில் அதிலிருந்து உண்டாகிய
அமுதம்போன்ற மொழி பயிலும் சந்திரமதியே!, நரர் அங்க மலை கொண்டு
- மனிதர்களுடைய தேகமாகிய மலையைக்கொண்டு சதுரங்க விரி சிந்து -
நால்வகைச் சேனைகளான பரந்த கடலில், நடும் இந்த மால் - நடுகின்ற
திருமால் போன்ற இவ்வரசன், பரர் அங்கம் மிக வென்று -
அயலார்களுடைய உடல்களை அழித்துச் சிறந்த வெற்றி பெற்று, வினை
கொண்டு - அந்த வெற்றிச்செயலையே மேற்கொண்டு, சிலை கொண்டு -
கருப்புவில் கையேந்திக்கொண்டு, படை வந்த நாள் - மன்மதன்
படையெடுத்து வந்த நாளில், வரர் அங்கதரர் - மேலான வரும் அயன்
மால் இவர்களின் என்புகளைத் தரித்தவரும் ஆகிய சிவபெருமான்,
கொன்ற - நெற்றிக்கண்ணால் எரித்த, மதன் அங்கம் உகும் அங்க வள
நாடனே - மன்மதனுடைய உடம்பானது பொடியாகச் சிந்திய இடமாகிய
அங்கம் என்னும் பேர்பெற்ற வளநாட்டை யாள்பவன் ஆம்.
மன்மதனை நெற்றி
விழியால் எரித்த வரலாறு : - சிவபெருமான்
கைலையில் யோகிருந்தார், சூரனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள்
சிவபெருமானுடைய குமரனால் சூரனை வெல்ல எண்ணினர். சிவன்
யோகிருந்ததால் அவன் யோகத்தைக் கலைத்துப் பார்வதிதேவியாருடன்
கூடச் செய்வதற்கு மன்மதனை அனுப்பினர், மன்மதன் தன் மயக்கந்தரும்
பூங்கணைகள் விடுத்தும் சிவபெருமான் யோகம் நீங்கவில்லை.
நின்மலனாகிய சிவனை மயக்க முயன்றதால் சிவன் அவனைத் தன் நெற்றி
விழியால் எரித்து நீறாக்கினான். மன்மதன் அங்கங்கள் சிந்திய நாடு
அங்கநாடாயிற்று. சொலாய் : சொல்லாய் என்பதன் தொகுத்தல்.
(226)
|