பக்கம் எண் :


170

     பாஞ்சால நாட்டு அரசனைக் காட்டல்
331. தேஞ்சாலும் இருகுன்று களைஎஞ்சும் இடைஅஞ்சு
   திருவே இவன்
ஈஞ்சாலும் இறவாலும் இறலான திடைபீறி
   இழிதே றலும்
காய்ஞ்சாலு கதிர்சாட மாஞ்சோலை இடர்சோர்பு
   கனியூ றலும்
பாய்ஞ்சாலை வயலூறு பூஞ்சாலி விளைவேறு
   பாஞ்சா லனே.

     (இ - ள்.) தேம் சாலும் இரு குன்று களை - இனிமை மிகுந்த
இரண்டு தனங்களாகிய மலைகளைச் சுமக்க, எஞ்சும் இடை அஞ்சு
திருவே - தேய்ந்து குறைந்திருக்கிற இடையானது ஒடிந்து விடுமோ என்று
பயப்படுதற்கேதுவான நிலையிருக்கிற இலக்குமி போன்றவளே!, இவன் -
இவ்வரசன், ஈஞ்சாலும் இறவாலும் - ஈந்தின் முள்ளாலும் இறால்
மீன்களாலும், இறலானது இடைபீறி இழி தேறலும் - தேன் கூடானது
நடுவே கிழிந்து வழிகின்ற தேனும், காய்ஞ்சு ஆலும் கதிர் சாட - காய்ந்து
அதிர்கின்ற சோளக்கதிர்கள் மோதுதலினால், மாஞ்சோலை இடர் சோர்பு
கனி ஊறலும் - மாஞ்சோலைகளிலுள்ள மாங்கனிகள் நைந்து அதினின்று
ஒழுகுகின்ற தேனும், பாய்ஞ்சு - பாய்ந்து, ஆலை ஊறு வயல் -
ஆலையிலிருந்து கருப்பஞ்சாறு ஊறப் பெற்ற வயல்களில், பூஞ்சாலி
விளைவு ஏறு பாஞ்சாலனே - அழகிய நெல் விளைவு மிகுதியுள்ள
பாஞ்சால மன்னனே.

     இரு குன்று : பண்புத்தொகை; இரண்டு + குன்று. திரு : உவமையாகு
பெயர். காய்ஞ்சு : காய்ந்து என்பதன் போலி. உம்மை ; எண்ணும்மை.
பூஞ்சாலி : பண்புத்தொகை. பாய்ந்து, பாய்ஞ்சு என்பது போலி, ஈந்து, ஈஞ்சு
- இதுவும் இது. ஈந்தின்முட் குத்துவதாலும் இறால் மீன்கள் மேலே துள்ளிக்
குதிப்பதாலும், தேன் கூடு கிழந்து தேன் வழிந்து வயலிற் பாயும், மாங்கனிச்
சாறும் கரும்புச் சாறும் பாயும். அதனால் நெற்பயிர் சிறந்த விளையும்
என்பது.
                                                   (227)

  சந்திரமதிக்கு காந்தார நாட்டரசனைக் காட்டல்
332. தேம்போதி னீர்ந்தாது பூம்பாளை நீங்காத
   தேங்கோ தையாய்
கூம்போடி வான்றோயும் மான்றேரி லீண்டாசை
   கூர்ந்தே றினோன்
றூம்பொடு கூன்கோடு வார்ந்தோடி ஈன்றேரி
   தோய்ந் தேறவே
காம்போடு சேம்பொடு சேர்ந்தார மார்ந்தோடு
   காந்தா ரனே.

     (இ - ள்.) தேம் போதின் ஈர்ந் தாது - தேனையுடைய பூக்களின்
குளிர்ந்த மகரந்தப் பொடியும், பூம் பாளை - அழகிய பூரப் பாளை
என்னும்