பக்கம் எண் :


177

     (இ - ள்.) தையலாள் கழுத்தினில் தாலி உண்டெனில் -
பெண்ணாகிய சந்திரமதியின் கழுத்தில் தாலி இருக்குமானால், நீர்
கையினால் கண்ணுறக் காட்டும் என - நீவிர் அதனைக் கையினால்
எடுத்துக் கண்ணுக்குத் தெரியும்படி காட்டும் என்று மதிதயன் சொல்ல,
அரசர் - அரிச்சந்திரன் மொழியையும் சந்திரதயன் மொழியையும் கேட்ட
ஏனை அரசர்கள், செய்ய கை அறைந்து - தங்கள் சிவந்த கைகளை
ஒன்றோடொன்று அறைந்துகொண்டு, அணி மூக்கினிற் சேர்த்தி - விரலை
அழகிய மூக்கில் வைத்து, இ ஐயனும் பொய்யன் என்று கூறினர் -
(நாங்கள் எல்லோரும் பார்த்தோம் அப்படியில்லை) இவ்வரசனும் பொய்
கூறுபவன் என்று கூறினார்கள்.

     செய்ய கை : குறிப்புப்பெயரெச்சத்தொடர். ஐயனும் : உம்மை
உயர்வுசிறப்பு. அரிச்சந்திரன் பொய் கூறாதவன் என்று பிறர் சொல்லக்
கேட்டோம். இவனும் பொய் கூறுவன்போலும் என்ற குறிப்பு விளங்கலால்.
கையறைவதும் மூக்கிற் கை வைப்பதும் இழிவுக்கு அறிகுறியாம்.
                                                   (240)

 
  அரிச்சந்திரன் திருமங்கிலியம் கண்டதற்கும், ஏனை மன்னர்
   காணாததற்கும் தேவரகசியம் உண்டு எனல்
345. மண்டல வேந்தன்எம் மடந்தை மங்கலம்
கண்டது நீங்கடாங் கண்டி லாததும்
திண்டிற லீரொரு தேவ ரகசியம்
உண்டென மதிதயன் உரைப்ப தாயினான்.

     (இ - ள்.) திண் திறலீர் - வன்மை மிக்க மன்னர்களே !, மண்தல
வேந்தன் - இப் பூவுலக மன்னனாகிய அரிச்சந்திரன், எம் மடந்தை
மங்கலம் கண்டதும் - எம் மகள் கழுத்தில் திருமங்கிலியம் கண்டதற்கும்,
நீங்கள்தாம் கண்டிலாததும் - நீங்கள் காணாமைக்கும், ஒரு தேவ ரகசியம்
உண்டு என - ஒரு தேவரகசியம் உண்டு என்று, மதிதயன் உரைப்ப தாயினான் - மதிதயன் கூறினான்.

     மதிதயன் அரசர்களை நோக்கி, 'மன்னர்களே! நீங்கள் திருமங்கல
நாண் கழுத்தில் இல்லையென்று கூறுகிறீர்கள்; அரிச்சந்திரன் காண்பதாகக்
கூறுகின்றான். இதற்குக் காரணம் ஒன்றுண்டு. அது தேவ ரகசியம். அதனை
உங்கட்கு வெளிப்படையாக இப்போது கூறுகின்றேன்' என்றான்.
"தேவரகசியம்" என்பது தெய்வத்தாற் கூறப்பட்டு வெளிப்படுத்தாதிருக்க
விதித்த மறைபொருள். அதனால் அது காறும் நான் ஒருவரிடமும்
கூறிலேன் என்பது குறிப்பு.
                                                   (241)

 
  சந்திரமதி கழுத்தில் தாலியைக் கண்டவர் அவளுக்குக்
    
   
    கணவர் எனல்
  
346. அண்டர்நா யகன்வரம் அளித்த நாளையில்
வண்டணி குழலியோ டுதித்த மங்கலம்
கண்டவர் பதிஇவட் கென்ற கட்டுரை
உண்டஃ தன்றிவே றுண்டு கேட்டிரால்.