பக்கம் எண் :


180

வெஞ்சுடர் முன்சசி யாம்என மிக்கோர்
கஞ்ச முகங்கள் கரிந்தன அன்றே.

     (இ - ள்.) வஞ்சி வழங்கிய மாலை அணிந்தோன் முகம் - வஞ்சிக்
கொடிபோன்ற சந்திரமதி அளித்த சுயம்வர மாலையையணிந்த
அரிச்சந்திரனுடைய முகம், செஞ்சுடரின் - சூரியனைப்போல, நின்று ஒளி
செய்ய - நிலைபெற்று நின்று ஒளி வீச, வெஞ்சுடர் முன் சசியாம் என -
சூரியன்முன் சந்திரன் போல, மிக்கோர் கஞ்ச முகங்கள் கரிந்தன -
மிகுந்துள்ள அரசர்களின் தாமரை மலர்போன்ற முகங்கள் வாடி ஒளி
மழுங்கின.

     உவமையணி. வஞ்சி : உவம ஆகுபெயர். அணிந்தோன் :
வினையாலணையும்பெயர். செஞ்சுடர் : பண்புத்தொகை. அன்று, ஏ :
அசைகள். செஞ்சுடரின் : ஐந்தனுருபு ஒப்புப்பொருளில் வந்தது.

     "திண்டேர் வயவேந்தர் செந்தா மரைமுகங்கள்
     வெண்டா மரையாய் வெளுத்தவே - ஒண்டாரைக்
     கோமாலை பெற்ற குலமாலை வேற்கண்ணாள்
     பூமாலை பெற்றிருந்த போது"

என்ற நளவெண்பாச் செய்யுளை ஒப்பு நோக்குக.
                                                   (246)

351. மாதர்கள் ஆர்த்தனர் வானவர் ஆர்த்தார்
கீதர்கள் ஆர்த்தனர் கேளிரும் ஆர்த்தார்
சூதர்கள் ஆர்த்தனர் துறவரும் ஆர்த்தார்
வேதர்கள் ஆர்த்தனர் வேலை யடங்க.

     (இ - ள்.) வேலை அடங்க - அப்போது கடலொளி அடங்கும்படி,
மாதர்கள் ஆர்த்தனர் - பெண்கள் ஆரவாரித்தனர், வானவர் ஆர்த்தார்
- தேவர்களும் ஆரவாரித்தார்கள், கீதர்கள் ஆர்த்தனர் - இசை வல்லார்
ஆரவாரித்தனர், கேளிரும் ஆர்த்தார் - சந்திரமதியின் உறவினர்
ஆரவாரித்தார்கள், சூதர்கள் ஆர்த்தனர் - தேர்ப்பாகர்கள் ஆர
வாரித்தார்கள், துறவரும் ஆர்த்தார் - முற்றத்துறந்த முனிவரும்
ஆரவாரித்தார்கள், வேதர்கள் ஆர்த்தனர் - மறையவரும் ஆரவாரித்தனர்.

     துறவரும் : உம்மை சிறப்பு; சொற்பொருட்பின்வருநிலையணி,
'ஆர்த்தனர்' என்ற சொல் 'ஒலித்தனர்' என்ற பொருளுடன் பின் பல
இடங்களில் வந்தன ஆதலால்.
                                                   (247)

 
352. நல்லியல் நூல்அறி நாவலர் பாடப்
பல்லிய மும்பல பாடலும் ஆர்ப்ப
அல்லிய மலர்த்தொடை மாலை அணிந்த
வல்லியும் மன்னனும் மாளிகை புக்கார்.

     (இ - ள்.) நல் இயல் நூல் அறி நாவலர் பாட - நல்ல இலக்கண
இலக்கிய நூலறிஞர் பாடவும், பல்லியமும் பல பாடலும் ஆர்ப்ப - பல
வாத்தியங்களும் பல பாடல்களும் முழங்கவும், அல்லி மலர்த் தொடை
மாலையணிந்த வல்லியும் மன்னனும் - அக இதழ்களையுடைய மலர்களால்