பக்கம் எண் :


181

தொகுக்கப்பட்ட மாலையணிந்த வல்லிக்கொடிபோன்ற சந்திரமதியும்
அரிச்சந்திர அரசனும், மாளிகை புக்கார் - மாளிகைக்குள் புகுந்தார்கள்.

     உம்மைகள் எண்ணும்மை. தொடை : காரணப்பெயர். புக்கார் - புகு
: பகுதி; ஆர் : பலர்பால் வினைமுற்று விகுதி. பகுதி ஒற்று இரட்டித்து
இறந்தகாலங் காட்டியது. நாவலர் பாட என்பது, மங்கல வாழ்த்துப்
பாடியதை யுணர்த்தியது. 'பல பாடல்' என்பது இசைப் பாடலை
யுணர்த்தியது.
                                                   (248)

 
  அரிச்சந்திரன் சந்திரமதியைப் புணர்தல்   
353. மின்னிய தாம விளக்கொரு கோடி
கன்னியர் வந்து கலத்தொ டெடுப்ப
மன்னிய மாமணி மஞ்சம் அணைந்தே
பொன்னின் முலைக்கொடி யோடு புணர்ந்தான்.

     (இ - ள்.) மின்னிய தாம விளக்கொரு கோடி - ஒளிவீசுகின்ற
ஒரு கோடி நிறை விளக்குகளை, கன்னியர் வந்து கலத்தொடு எடுப்ப - பெண்கள் வந்து ஏந்து கலங்களோடு ஏந்தி நிற்க, மன்னிய மாமணி மஞ்சம்
அணைந்தே - நிலைபெற்ற சிறந்த மணிகள் இழைத்த கட்டிலில் சேர்ந்து,
பொன்னின் முலைக்கொடியோடு புணர்ந்தான் - பொன் போன்ற
முலைகளையுடைய கொடிபோன்ற சந்திரமதியோடு அரிச்சந்திரன்
கூடினான்.

     பொன் - திருமகள் எனவுங் கூறலாம், திருமகளைப்போன்ற
சந்திரமதி என்க. பொன்னின் - பொன்னையொத்த தேமற்படர்ந்த எனக்
கூறலுமாம். விளக்குகளைக் குடங்களில் அல்லது பலவகைக் கலங்களில்
ஏற்றிவைத்து மங்கையர் சுமந்துசெல்லுதல் இயல்பு ஆதலின் "கலத்
தொடெடுப்ப" என்றார். தாமம் - மாலை, ஒழுங்கு முதலிய
பலபொருளொருசொல், ஏற்பன கூட்டிக்கொள்க.
                                                   (249)

 
     இருவரும் விளையாடல்
354. ஆரம் அகிற்புகை காசறை நீர்கர்ப்
பூர நரந்தம் அணிந்த புலர்த்திப்
பார தனத்தினில் இட்ட பராகம்
சோர அணிந்தெறி சுண்ணம் எறிந்து.

     (க - து.) ஆரம் அகிற் புகை காசறை நீர் கர்ப்பூரம் நரந்தம்
அணிந்து - சந்தனக் குழம்பும் அகிற் புகையும் மயிர்ச்சாந்தும் பனி நீரும்
பச்சைக் கற்பூரமும் கத்தூரியும் ஆகிய இவற்றை அணிந்து, புலர்த்தி -
உலரவைத்து, பார தனத்தினில் இட்ட பராகம் - கனம் பொருந்திய
கொங்கைகளில் பூசிய மணப் பொடிகள், சோர அணிந்து - உதிரும்படி
பின்னும் அலங்கரித்து, சுண்ணம் - வாசனைப் பொடிகளை, எறிந்து -
ஒருவர்மே லொருவர் தூவி யெறிந்து விளை யாடியும்
(252) புணர்ந்தார்.