|
அம் குழலில் - மேகம்போன்ற
அழகிய கூந்தலில், வண்டு அலம்பிடினும்
- வண்டுகள் ஒலித்தாலும், மண்டலத்து அரசன் சிந்தை - பூமண்டலம்
முழுமைக்கும் அரசனான அரிச்சந்திரனுடைய மனம், குறைவிலா நிறை
இடர் எய்தி - குறைவற்ற நிறைந்த துன்பம் அடைந்து, அம் மங்கை
மருங்குலின் ஒரு வழித்து - அந்தச் சந்திரமதியின் இடை போல ஒருவழி
நில்லாமல் தள்ளாடியது.
மருங்குலின்
: ஐந்தனுருபு ஒப்புப்பொருளில் வந்தது. கலவி, புலவி :
முரண்தொடை; முண்டக வதனம் : உவமத்தொகை. வழித்து : குறிப்பு
வினைமுற்று. அரிச்சந்திரனும் சந்திரமதியும் ஒருவரை யொருவர் நோக்கிப்
புலவியும் கலவியும் விளைத்துப் புணர்ந் தின்பம் நுகர்ந்திருந்தனர் என்க.
முகம் வெயர்த்தாலும் முலை மாலை அசைந்தாலும் கூந்தலில் வண்டு
குலைந்தாலும் அரிச்சந்திரன் மனம் வருந்திச் சந்திரமதி இடைபோலத்
துவண்டு மெலிந்தான் என்று கூறினர். இதனாற் பொன்போல மனைவியைப்
போற்றினன் என்பது தோன்றிற்று.
(254)
இடை
இறுமென்று அணிகள் மாலை கலை இவற்றைக் கழற்றல்
| 359. |
உடைப்பெரும்
பண்ட மிகக்கலத் தேற்றி
ஒலிகடல் நீந்திஓர் துறைசேர்ந்
தடைப்பெரும் பரத்தால் தாழும்மென் றோடி
அறப்பயந் திறக்குவார் போலப்
படைக்கர விழியாள் அணியொடு கலையும்
பனிமலர்த் தொடையலும் பரமாய்
இடைக்கிடர் விளைக்க இறும்எனப் பதறி
இருகையால் களைந்தரு குறுத்தான். |
(இ - ள்.)
கலத்து உடைப் பெரும் பண்டம் மிக ஏற்றி - கப்பலில்
தங்களுக்குச் சொந்தமான பெருஞ்சரக்குகள் பலவற்றை மிகுதியாக ஏற்றி,
ஒலி கடல் நீந்தி ஓர் துறை சேர்ந்து - ஆரவாரிக்கின்ற கடலைக் கடந்து
ஒரு கரை சேர்ந்து, அடைப் பெரும் பரத்தால் - தாங்கள் ஏற்றி அடைத்து
வைத்திருந்த பெரிய பாரத்தால், தாழும் என்று - கப்பல் தாழ்ந்துவிடும்
என்று, அறப் பயந்து ஓடி இறக்குவார் போல - மிகவும் பயந்து
ஓடிப்போய்ச் சரக்குகளை இறக்குவார் போல, படைக்கல விழியாள் -
வாளாயுதம்போன்ற கண்களுடைய சந்திரமதியின், அணியொடு கலையும்
- அணிகலன்களையும் ஆடையையும், பனி மலர்த் தொடையலும் -
குளிர்ச்சிபொருந்திய பூமாலைகளையும், பரமாய் இடைக்கு இடர் விளைக்க
இறும் எனப் பதறி - பாரமாயிருந்து இடுப்புக்குத் துன்பம் உண்டாக்கி
ஒடியச்செய்யும் என்று பதறி, இரு கையால் களைந்து அருகு உறுத்தான் -
இரண்டு கைகளாலும் நீக்கிப் பக்கத்தில் வைத்தான்.
ஒலி கடல் : வினைத்தொகை; உவமையணி. அணியொடு
கலையும் -
ஓடு : எண்ணுப்பொருளில் வந்தது. தொடையல் - தொடு : பகுதி; ஐ :
விகுதி; அல் : சாரியை.
|