பக்கம் எண் :


187

     கதிர் : ஆகுபெயர். வஞ்சமற்ற நன்னெறி மாசற்ற வெண்மைக்கு
உவமையாயிற்று. அரணமும் அகழும் எண்ணும்மை.
     அரிச்சந்திரனும் சந்திரமதியும் கொடி குடை முதலிய விருதுகளுடன்
புறப்பட்டுக் கோட்டையும் அகழுங் கடந்து புறஞ்சென்றனர் என்பது.
                                                   (258)

  யாவரும் வழியனுப்பிச் செல்ல அரிச்சந்திரன்
     கன்னோசி கடந்து செல்லல்
 
363. காந்தளம் செங்கைக் கன்னியர் சில்லோர்
   கைதொழு திடைஇடை மீள
மாந்தர்கள் வணங்கி அவரவ ருடனே
   மந்திரத் தலைவர்மீண் டேக
வேந்தர்வீழ்ந் திறைஞ்சிப் பணிவிடை கேட்டு
   விடைகொடு மீண்டுமூ ரெய்தப்
போந்தனன் களிறும் புரவியும் தேரும்
   புடைதொறும் கடல்எனப் பொலிய.

     (இ - ள்.) காந்தள் அம் செங்கைக் கன்னியர் சில்லோர் - காந்தள்
பூப்போன்ற அழகிய சிவந்த கைகளையுடைய பெண்கள் சிலர், கை
தொழுது இடை இடை மீள - கைகளால் வணங்கி மத்தியில் மத்தியில்
திரும்பிச் செல்ல, மாந்தர்கள் வணங்கி அவரவர் உடனே வர - ஏனைய
மனிதர் - கும்பிட்டுக்கொண்டு கூடவே வர, மந்திரத் தலைவர் மீண்டு ஏக
- மந்திரிகள் திரும்பிப் போகவும், வேந்தர் வீழ்ந்து இறைஞ்சிப் பணிவிடை
கேட்டு விடை கொடு மீண்டும் ஊர் எய்த - அரசர்கள் விழுந்து வணங்கி
அரிச்சந்திரன் ஆணையை மேற்கொண்டு விடை கொடுத்துத் திரும்பவும்
கன்னோசி யடைய, களிறும் புரவியும் தேரும் புடை தொறும் கடல் எனப்
பொலியப் போந்தனன் - யானையும் குதிரையும் தேரும்
பக்கங்களிலெல்லாம் கடல் போன்று ஆரவாரித்து விளங்க அரிச்சந்திரன்
கன்னோசி நகரம் விட்டு நீங்கினான்.

     காந்தள் கை : உவமத்தொகை; செங்கை : பண்புத்தொகை; கை
தொழுது : மூன்றாம்வேற்றுமைத்தொகை; கன்னமாபுரிக் கன்னியர் பலர்
உடன் வந்து கைதொழுது வழியனுப்பவும் அந்நகர மாந்தர் பலரும் வந்து
வணங்கி வழியனுப்பவும் விடைகொண்டு சேனைகளுடன் சென்றான்
அரசன் என்பது.
                                                   (259)

    நிழலை வேறாரு பெண்ணன்னம் என நினைத்துப் பெண்ணன்னம்
               ஊடும் மருதநிலம் அடைதல்


                    கலிநிலைத்துறை   

 
364. தோடு துன்றிய மரைமிசைத் துணைபுணர் அன்னம்
மாடு நின்றதோர் மதிநிழ றனைக்கண்டு மற்றோர்
பேடு நின்றெனாச் சேவலைப் பிரிந்தயன் மலர்சேர்ந்
தூடு கின்றஅச் செழும்புனற் றண்பணை உற்றார்.