பக்கம் எண் :


188

     (இ - ள்.) தோடு துன்றிய மரைமிசை - நெருங்கின
இதழ்களையுடைய தாமரையில், துணை புணர் அன்னம் - ஆண்
அன்னத்துடன் கூடிய அன்னப்பேடு, மாடு நின்ற ஓர் மதி நிழல் தனைக்
கண்டு - அருகிலிருந்த நீருட்டோன்றும் ஒரு வெண்ணிலாவின் நிழலைக்
கண்டு, மற்றோர் பேடு நின்றெனா - வேறே யொரு பெட்டையன்னம் நம்
ஆண் அன்னத்துடனே கூடியிருக்கிறதென்று, சேவலைப் பிரிந்து, ஆண்
அன்னத்தைப் பிரிந்து, அயல் மலர் சேர்ந்து - மற்றொரு பூவில்
போயிருந்து, ஊடுகின்ற - பிணங்குகின்ற, அச் செழும் புனல் தண் பணை
உற்றார் - அத் தன்மையான செழித்த நீர்வளம் பொருந்திய குளிர்ந்த
மருதநிலத்தினை அடைந்தார்.
                                                       (260)

 
           பொழில் வளங் காட்டல்  
365. கோடு வார்மலர்ப் பொழிலையும் குளிர்தடத் தினையும்
நீடு வார்சிறைப் பறவையின் குழாத்தையும் நிறைநீர்
ஆடு வாரையும் அவ்விடத் தணிமலர் கொய்து
சூடு வாரையும் காட்டுவான் தோகைக்குத் துணைவன்.

     (இ - ள்.) வார் கோடு மலர்பொழிலையும் - நீண்ட கொப்புகளை
யுடைய பூஞ்சோலைகளையும், குளிர் தடத்தினையும் - குளிர்ந்த
குளங்களையும், நீடுவார் சிறைப்பறவையின் குழாத்தையும் - மிக நீண்ட
சிறகுகளையுடைய பறவைக்கூட்டங்களையும், நிறை நீர் ஆடுவாரையும் -
நிறைந்த தண்ணீரில் குளிப்பவர்களையும், அவ்விடத்து - அந்த
இடங்களில், அணி மலர் கொய்து - அழகிய பூப்பறித்து, சூடுவாரையும் -
சூடிக்கொள்பவர்களையும், தோகைக்குத் துணைவன் காட்டுவான் -
மயில்போலுஞ் சாயலுடைய சந்திரமதிக்கு அவள் வாழ்க்கைத்
துணைவனாகிய அரிச்சந்திரன் காட்டலாயினான்.

     தோகை : சினையாகுபெயராய் மயிலுக்கு ஆகிப் பின் உவமையாகு
பெயராய்ச் சந்திரமதிக்கு ஆதலின் இருமடியாகுபெயர். காட்டுவான் :
காலவழுவமைதி. உம்மைகள் எண்ணும்மைகள். அணி மலர் :
பண்புத்தொகை. சூடுவார், ஆடுவார் : வினையாலணையும் பெயர்கள்.
                                                   (261)

 
        வண்டு தேனருந்துஞ் சிறப்பு
366. செய்ய மாமலர் அடுத்துஒண் பெடைகடே னருந்தாப்
பைய வேசுரும் படைவழி பார்த்தினி துறலால்
தைய லார்உண வமைத்தன்பர் தாம்வர நோக்கம்
செய்யும் நாள்ஒத்த செழுமலர்க் காவெலாம் திருவே.