பக்கம் எண் :


19

பொருந்திய அப் பெரிய ஊது கொம்புகளையும், (ஆறு நீளமாக நெருங்கிய
அப் பெரிய கரைகளையும்), வரன்றி - வாரிக்கொண்டும் மோதிக்கொண்டும்
வருதலால், மே ஆரணத்து உறை அந்தரி உள் மகிழ்ந்து - பொருந்திய
வேதத்தின் உள்பொருளாய் உறைகின்ற துர்க்கையின் மனம் மகிழ்ந்து, ஆர்
ரணத்துறை ஒத்தது - பொருந்தியிருக்கிற போர்க்களத்திற்கு ஒப்பாயிற்று.

     துர்க்கை, போர்க்களத்தின் வென்றியைக் கொடுப்பவள் ஆதலால்
அவள் உறைவது 'போர்க்களம்' என்றார். ரணத்துறை என்பது வட மொழி.
ரணம் என்பது புண்ணுக்குரிய பெயர். இது புண்படும் இடமாகிய
போர்க்களத்தை யுணர்த்தியது ஆகுபெயர். சிலேடையும் இரண்டடி
மடக்குஞ் சேர்ந்தது.
                                                    (14)

29. துடிம ருங்கில் கொடிச்சியர் தோயவே
துடிம ருங்கில் பரப்பிச் சுழித்து ராய்க்
கொடிபு னைந்த குகன்கழல் தாழ்ந்துபூங்
கொடிபு னைந்த குறிஞ்சி கடந்ததே.

     (இ - ள்.) துடி மருங்கில் கொடிச்சியர் தோய - உடுக்குப் போன்ற
இடையினையுடைய குறமகளிர் நீராட துடி - ஏலக்கொடிகளை, மருங்கிற்
பரப்பி - பக்கங்களில் பரப்பிக்கொண்டு, கொடி புனைந்த குகன் கழல்
கழித்து உராய்த் தாழ்ந்து - சேவல் கொடி ஏந்திய முருகப்பெருமான்
திருவடிகளைச் சுற்றிவந்து அடியிற் பொருந்தி வணங்கி, பூங்கொடி புல்
நைந்த குறிஞ்சி கடந்தது - பூங்கொடிகளும் புற்களும் பாய்தலால்
நையப்பட்ட குறிஞ்சிமலைச் சாரலைக் கடந்தது.

     ஏலக்கொடிகளைக் கரைகளிற் பரப்பியமை குறமகளிர்க்கு
நறுமணமும் நீராடற்கு மறைவும் அளித்தது. கொடிச்சியர் - குறிஞ்சிநில
மகளிர். மருங்கில் : உருபுமயக்கம். இல் கொடிச்சியர் - வீட்டில்
செறிக்கப்பட்ட பருவம் வந்த பெண்கள் எனவும் பொருள்கொள்ளலாம்.
இதுவும் இரண்டடி மடக்கு.

     "இல்லிகவாப் பருவத்தில் இவர்கள்மர பினுக் கேற்கும்
தொல்குலத்து வணிகர்மகட் பேசுதற்குத் தொடங்குவார்."
     (பெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் புராணம்.)

     துடி மருங்கு : உவமத்தொகை. கழல் : தானியாகு பெயர்.
     ஏகாரம் : ஈற்றசை.
                                                    (15)

       பாலையில் சரயு ஆறு
30. வீயும் வேங்கையும் மந்தியும் மேதகு
வீயும் வேங்கையும் மந்தியும் வீழ்பலாக்
காயும் பாலையில் கைக்கய மும்கொடு
காயும் பாலையில் வந்து கலந்ததே.