பக்கம் எண் :


190

     (இ - ள்.) முத்தன திருநகைத் தோகாய் - முத்துப்போன்ற அழகிய
பற்களையும் மயில்போன்ற சாயலையுமுடைய சந்திரமதியே !, ஆர நீள்
மடைப் படப்பையிற் புகாது - மிகவும் நீண்ட மடைகளை யுடைய
வயல்களிற் புகாமல், இடை அழுந்து தூர ஓடியே வெளியிடைப் பரவுறும்
தோயம் - இடையே பள்ளமாய் அழுந்திக் கிடக்கின்ற நீண்டதூரம் வரை
ஓடி வேறு வெளியிடங்களில் பரந்து பாய்கிற தண்ணீர், தாரம் ஆனவள்
வருந்திட - திருமணஞ்செய்த மனைவி வருத்தமுற, கணிகையைச் சாரும்
- பொதுமகளிரைக் கூடுகின்ற, சோரர் ஒத்தன - கள்ளத்தனமான ஆடவர்
போன்றது.

     தோயம் ஒத்தன : ஒருமைப்பன்மை மயக்கம்; தோகை :
இருமுடியாகு பெயர்.

     மடைவழி சென்று வயலிற் பாயவேண்டிய நீர் அவ்வழிப் புகாது
வெளியிற் சென்று பரவி நின்றது. அந்நீர், தம் மனைவியர்பாற் செல்லாது
பரத்தையர்பாற் செல்லும் ஆடவரை யொத்தது என்பது. இது உவமையணி.
                                                   (264)

 
  வண்டு பாடல், மயில் ஆடல், தென்றல் வீசுதல்   
369. மன்றல் வண்டிசை பாடமா மயில்நட மாடத்
தென்றல் வந்தலைத் தலைபல முழஒலி செய்ய
நின்ற பூகங்கள் இலைபழுக் காயெதிர் நீட்டக்
கொன்றை பொன்சொரி வளமைபா ராய்குலக் கொடியே.

     (இ - ள்.) குலக் கொடியே - உயர்குலத்திற் பிறந்த பூங்கொடி
போன்ற பெண்ணே !, மன்றல் வண்டு இசை பாட - மணம் பொருந்திய
வண்டுகள் இசை முரல, மா மயில் நடம் ஆட - சிறந்த மயில்கள்
நடனஞ்செய்ய, தென்றல் வந்து அலைத்து - தென்றல் காற்று வந்து வீசி,
அலை பல முழவு ஒலி செய்ய - அலைகளால் பல மத்தளங்களின்
ஓசையைச் செய்ய, நின்ற பூகங்கள் - அங்கே நிற்கின்ற கமுகமரங்கள்,
இலை பழுக்காய் எதிர் நீட்ட - வெற்றிலைக்குத் தகுந்த பாக்குகளை
எதிரே நீட்ட, கொன்றை பொன் சொரி வளமை பாராய் - கொன்றை
மரங்கள் பொன் கொடுப்பனபோல் பொன்னிறமலர்களைச் சொரிகின்ற
அழகைப் பார்ப்பாயாக.
     கொடி : உவமை ஆகுபெயர்; வண்டிற்கு மணம் பூந்தாது படிவதால்
ஆனது, மாமயில் : உரிச்சொற்றொடர்; முழவொலி : உவமத்தொகை.

     கமுகு பழுக்காயுதிர்ப்பதும், கொன்றை மலர்களைச் சிந்துவதும்
பாடல் ஆடல் புரியும் புலவர்களுக்குப் பரிசு வழங்குவனபோலத்
தோன்றுகின்றது என்பது கருத்து.
                                                   (265)

 
  அன்னமும் பெடையும் புதுமலர் புகுங் காட்சி   
370. மதகு மங்கல முரசெழ வண்டுவாழ்த் திசைக்க
உதிரம் ஒத்தசெந் தாமரை ஓமத்தீ வளர்ப்பப்
புதும லர்த்துணை புணர்இள அன்னமும் பெடையும்
வதுவை செய்வன ஒப்பன கண்டருள் மயிலே.