பக்கம் எண் :


197

தான்பெண்களின் விழிகளுக்குத் தோல்வியடைந்து, இணக்குதற்கு இசைந்து
- பின்பு சமாதானம் செய்துகொள்ளுவதற்கு விரும்பி, அயல் ஓர் துணை
விடித்து - அதற்கு அயலாகிய மூக்கினைத் துணையாகக்கொண்டு, இதம்
சொல்வது போல்வது - நலஞ்சொல்பவர்களைப் போன்றிருக்கிறது.

     நீர் மூழ்கும்போது பலமுறை குவளை மலர் நாசியிற் பட்டு மணம்
அறியும்படி செய்தது. அவ்வாறு நாசியிற் பட்டது, "நான் விழிக்குப்
பகையாகி முன் தோற்றுவிட்டேன். இனி அவ்விழிகளுடன் இணங்கியிருக்க
விழைகின்றேன். நீ உடன்படுத்திவைப்பாய்" என்று மூக்கினைத்
துணையாகக்கொண்டு அதனிடங் கூறுவதுபோலத் தோன்றுகிறது. இது
தற்குறிப்பேற்றம்.
                                                   (278)

 
        ஆம்பல் மகளிரடியைப் பற்றுதல்   
383. அடலை உற்றவேல் விழியினாள் வாய்கண்ட ஆம்பல்
உடலி னுட்பசந் துட்டுளைப் பட்டசைந் தொல்கி
மடலெ டுத்திரு மலர்அடி பூணலான் மயிலே.
படர்த டங்குடைந் தேறுவாள் படும்படர் பாராய்.

     (இ - ள்.) மயிலே - மயில்போன்ற சாயலையுடைய பெண்ணே!,
அடலையுற்ற வேல் விழியினாள் - வலிபொருந்திய வேல்போன்ற கண்
களையுடையவளின், வாய் கண்ட ஆம்பல் - வாயைக்கண்ட சேதாம்பல்
மலரானது, உடலினுள் பசந்து - தன் உடம்புக்குள்ளே பசுநிறங் கொண்டு,
உள் துளைப் பட்டு - உள்ளே துவாரம் உடையதாய், அசைந்து ஒல்கி
மடல் எடுத்து - ஆடித் துவண்டு தன் மலர் இதழ்களைக் கொண்டு, இரு
மலர் அடி பூணலால் - இரண்டு செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின்
கீழடங்கிக் கிடந்து பற்றிக்கொள்வதால், படர் தடம் குடைந்து ஏறுவாள்
- பரந்த குளத்தில் குளித்துவிட்டுக் கரை ஏறுகிறவள், படும் படர் பாராய்
- படுகின்ற துன்பத்தைக் காண்பாயாக.

     வேல் விழி : உவமைத்தொகை. ஆம்பல் உடல் பசந்தது, உள் துளை
படுதல், ஒல்குதல் முதலியன பெண்களின் வாய்க்கு ஒவ்வாமை காரணமாக
உண்டான நாணத்தால் உளவாயின. உயர்ந்தோரைத் தாழ்ந்தோர்
வணங்குமுறைப்படி அடிபணிந்து ஆம்பல் வணங்கியது. இவைகள்
இயற்கையாய் அமைந்திருப்பதைக் கவி ஆம்பலின் தாழ்வு காரணமாகக்
கூறலின் இஃதும் தற்குறிப்பேற்ற அணி. பெண்களுக்குத் துன்பம் கடந்து
கரையேறும்போது காலில் கொடி பின்னிக் கொள்வதால் உண்டாவது.
                                                   (279)

 
  வேறொரு பெண்ணொடு தன் நாயகன் நீராடக் கண்ட
       பெண்ணின் கோபம்
  
384. நறும லர்க்குழ லாய்ஒரு நன்னுத லோடும்
துறும லர்த்தட மாடுதன் றோன்றலை ஒருத்தி
முறுவ லால்இதழ் அதுக்கியே முனைவிழி சிவக்கக்
கருவி நோக்கிய நோக்கமும் நோக்குநீ காணாய்.