பக்கம் எண் :


198

     (இ - ள்.) நறு மலர்க் குழலாய் - மணமிக்க மலரணிந்த கூந்தலை
யுடையவளே!, ஒரு நல் நுதலோடும் - ஒரு நல்ல நெற்றியுடைய வேறு
பெண்ணோடு, துறு மலர்த் தடம் ஆடு தன் தோன்றலை - நெருங்கிய
பூக்கள் நிறைந்த குளத்தில் நீராடுகிற தன் நாயகனை, ஒருத்தி - ஒரு
பெண் (பார்த்து), முறுவலால் இதழ் அதுக்கி - கோபத்தால் பற்களினால்
உதட்டைக் கடித்து, முனை விழி சிவக்க - கூர்மையான கண்கள்
சிவப்படைய, கருவி நோக்கிய நோக்கமும் - மனத்தில் சீற்றத்தால் அவள்
பார்க்கின்ற பார்வையும், நோக்கும் - அதற்கு அவன் எதிர் நோக்கும்
கோபப்பார்வையையும், நீ காணாய் - நீ பார்ப்பாயாக.

     நன்னுதல் : அன்மொழித்தொகை; இது பண்புத்தொகைப்புறத்துப்
பிறந்தது. முறுவல் - பல். நோக்கும் - எதிர்நோக்குவதும்.
                                                   (280)

 
  காவலனும் காரிகையும் காளி கோயில் அடைதல்   
385. இன்ன தன்மைய யாவையும் கண்டுகண் டேகி
மின்னும் மன்னனும் கலவியும் புலவியும் விளைத்து
நன்னெ டும்பணை கடந்தரும் சுரத்திடை நண்ணி
வன்ன மாமுலை வைரவி கோட்டத்தில் வந்தார்.

     (இ - ள்.) இன்ன தன்மைய யாவையும் கண்டு கண்டு ஏகி -
இப்படிப்பட்ட தன்மையையுடைய காட்சிகள் எல்லாவற்றையும் கண்டு
கண்டு சென்று, மின்னும் மன்னனும் கலவியும் புலவியும் விளைத்து -
மின்னல் போன்ற சந்திரமதியும் அரிச்சந்திர அரசனும் கூடலும் ஊடலும்
செய்துகொண்டே, நல் நெடும் பணை கடந்து - நல்ல பெரிய மருதநிலங்
கடந்து, அருஞ் சுரத்திடை நண்ணி - கடத்தற் கரிய பாலைநிலத்தை
அடைந்து, வன்ன மா முலை வைரவி கோட்டத்தில் வந்தார் - அழகிய
பெரிய தனங்களையுடைய காளிகோயிலுக்கு வந்தார்கள்.

     கண்டு கண்டு : அடுக்குத்தொடர் பன்மைபற்றி வந்தது. மின் :
உவமையாகுபெயர். கலவியும் புலவியும் எண்ணும்மை; முரண் தொடை.
மாமுலை : உரிச்சொற்றொடர். பணை - மருதநிலம். மருதநிலத்தின்
வளங்களை நோக்கிப் பின் பாலைவனம் வந்து காளிகோயிலைக் கண்டனர்
என்று கொள்க. சில இடங்களில் தங்கியபோது கூடலும் நிகழ்ந்தது பின்
ஊடலும் நிகழ்ந்தது என்க. ஊடலின்றிக் கூடல் நிகழின் இன்பஞ்சிறவாது
ஆதலின் 'கலவியும் புலவியும் விளைத்து' என்றார்.
                                                   (281)

 
  காளிதேவியை வணங்கிக் கங்கைநீராடிச் செல்லல்   
386. யோகி னிக்கணம் சூழ்ந்திடக் கொடும்சுரத் துறையும்
மோகி னிப்பெரு மாள்திரு முன்றிலிற் றொழுது
பாகி னில்சிறந் திரதித்த மொழியொடு பனிமந்
தாகி னித்துறை யணைந்ததிற் படிந்தயல் அகன்றார்.