பக்கம் எண் :


199

     (இ - ள்.) யோகினிக் கணம் சூழ்ந்திட - காளியின் ஏவல் செய்பவர்
(வித்தியாசத்திகள்) கூட்டஞ் சூழ்ந்திட, கொடுஞ் சுரத்து உறையும் -
கொடுமையான காட்டில் எழுந்தருளியிருக்கும், மோகினிப் பெருமாள்
திருமுன்றிலில் தொழுது - மோகினித் தலைவியாகிய காளி தேவியின்
முற்றத்தில் நின்று வணங்கிக் கொண்டு, பாகினில் சிறந்து இரதித்த
மொழியொடு - சர்க்கரைப் பாகிலும் இனிமையிற் சிறந்த தித்திக்கின்ற
மொழி பயிலும் சந்திரமதியோடு, பனி மந்தாகினித் துறை அணைந்து -
குளிர்ச்சிபொருந்திய கங்கைக்கரையை அடைந்து, அதிற் படிந்து - அதில்
நீராடி, அயல் அகன்றார் - அப்பாற் போனார்கள்.

     மொழி : ஆகுபெயர். இது மொழியினையுடையாளை யுணர்த்தியது.
பாகினிற் சிறந்து இரதித்த என்பது அடை. அடையடுத்த வாகுபெயர்
என்க.
                                                   (282)

 
         அயோத்தி நகரடைதல்
387. வேர லோங்கிய மலைகளும் வனங்களும் விடுத்துச்
சூர லோங்கிய அருவியும் துருத்தியும் கடந்து
சார லோங்கிய சக்கரப் பொருப்பையும் தள்ளி
ஆர லோங்கிய அயோத்திமா நகரியை அணைந்தார்
.

     (இ - ள்.) வேரல் ஓங்கிய மலைகளும் - மூங்கில்கள் உயர்ந்து
வளர்ந்துள்ள மலைகளும், வனங்களும் - காடுகளும், விடுத்து - நீங்கி,
சூரல் ஓங்கிய அருவியும் துருத்தியும் கடந்து - பிரம்புகள் ஓங்கி
வளர்ந்துள்ள இடங்களில் வரும் அருவிகளும் ஆற்றிடைக் குறைகளும்
கடந்து, காரல் ஓங்கிய சக்கரப் பொருப்பையும் தள்ளி - மலைப்பக்கங்கள்
உயர்ந்த சக்கரவாளகிரியையும் கடந்து, ஆரல் ஓங்கிய அயோத்தி
மாநகரியை அணைந்தார் - மதில் உயர்ந்துள்ள அயோத்தி நகரத்தை
அடைந்தார்.

     உம்மைகள் எண்ணும்மை. மன்னனும் சந்திரமதியும் மலை, வனம்,
அருவி, ஆற்றிடைக்குறை, சக்கரவாள மலை இவற்றைக் கடந்து அயோத்தி
நகரை யடுத்தனர் என்க.
                                                   (283)

 
         அரண்மனை புகுதல்
388. வார ணத்தொலி எழுமணி வாயிலில் புகுந்து
தோர ணத்தெருக் கடந்துசோ பனம்பலர் சொல்ல
ஆர ணத்தொலி யாதிகள் மழைஎன ஆர்க்கப்
பூர ணக்குடம் சுமந்தபொற் கோயிலில் புகுந்தார்.

     (இ - ள்.) வாரணத்து ஒலி - யானைகளின் பிளிறொலி, எழும்
அணி வாயிலில் புகுந்து - எழுகின்ற அழகிய கோட்டை வாயிலுக்குள்
நுழைந்து, தோரணத் தெருக் கடந்து - தோரணங்கள் கட்டி அணி
செய்யப்பெற்றுள்ள தெருக்களைக் கடந்து, பலர் சோபனம் சொல்ல - பல
மக்கள் மங்கலவாழ்த்துக்கள் கூற, ஆரணத்து ஒலியாதிகள் மழையென
ஆர்க்க - வேதமுழக்கம் முதலியன மேகமுழக்கம்போல முழங்க, பூரணக்
குடம் சுமந்த பொற்கோயில் புகுந்தார் - பூரண கும்பங்கள் வைக்கப்பட்ட
அரண்மனையுள்ளே புகுந்தார்.